Published : 17 Sep 2024 03:36 PM
Last Updated : 17 Sep 2024 03:36 PM

“என் ஒற்றைக் குறிக்கோள்...” - டெல்லி முதல்வராக பதவியேற்கும் அதிஷி விவரிப்பு

டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள அதிஷி

புதுடெல்லி: "டெல்லிக்கு ஒரேயொரு முதல்வர்தான்; அவரே அரவிந்த் கேஜ்ரிவால்" என்று டெல்லியின் புதிய முதல்வராக பதவியேற்கவுள்ள அதிஷி தெரிவித்துள்ளார்.

டெல்லியின் புதிய முதல்வராக ஆம் ஆத்மி கட்சியினரால் தேர்வு செய்யப்பட்ட அதிஷி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு வழங்கிய டெல்லியின் பிரபலமான முதல்வரும், எனது குருவுமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன். முதல்முறை அரசியல்வாதி ஒருவர் முதல்வராக வருவது எல்லாம் ஆம் ஆத்மி கட்சியில் மட்டும்தான் நடக்கும். நான் வேறு கட்சியில் இருந்திருந்தால் எனக்கு தேர்தலில் நிற்க கூட இடம் கிடைத்திருக்காது.

அரவிந்த் கேஜ்ரிவால் என்னை நம்பினார். என்னைச் சட்டப்பேரவை உறுப்பினராக்கினார். இன்று முதல்வர் பொறுப்பைக் கொடுத்துள்ளார். அவர் என் மீது காட்டும் அதிகப்படியான நம்பிக்கை எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. என்றாலும் எனது மூத்த சகோதரர் கேஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்வது வேதனை அளிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் மற்றும் டெல்லியின் இரண்டு கோடி மக்களின் சார்பில் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அது, டெல்லிக்கு என்றுமே ஒரே முதல்வர் தான். அவர் அரவிந்த் கேஜ்ரிவால்தான். இந்தப் பொறுப்பை என் தோல்களில் சுமக்கும் வரை எனது குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான். அது டெல்லி மக்களை பாதுகாப்பது, அரவிந்த் கேஜ்ரிவாலின் வழிகாட்டுதலின்படி டெல்லி அரசை வழிநடத்துவது.

அரவிந்த் கேஜ்ரிவால் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் கல்வி, சுகாதாரம், இலவச மின்சாரம் போன்ற திட்டங்கள் பாதிக்கப்படும் என டெல்லி மக்களுக்கு தெரியும்" என்று அதிஷி தெரிவித்தார். ஆம் ஆத்மி கட்சியின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான அதிஷி, கட்சியின் மூத்த தலைவர்களான அரவிந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் போன்றவர்கள் ஊழல் வழக்கு குற்றச்சாட்டில் சிறையில் இருந்தபோது தனியொருவாக பாரதிய ஜனதா கட்சியை சமாளித்தார். பல்வேறு முக்கியமான துறைகளின் பொறுப்புகளை வைத்திருந்த அதிஷி, முக்கியத் தலைவர்கள் இல்லாதபோது டெல்லி அரசின் கொள்கைகளை பாதுகாத்தார்.

இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகளால்தான் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா முடிவினை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்த கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். இதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.15) அடுத்த இரண்டு நாளில் தான் ராஜினாமா செய்ய இருப்பதாக அறிவித்தார். அதன்படி இன்று மாலை அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். அடுத்த முதல்வர் யார் என்பதைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏகள் கூட்டம் இன்று காலை நடந்தது. அதில், அமைச்சர் அதிஷியின் பெயரை அரவிந்த் கேஜ்ரிவால் முன்மொழிந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x