Published : 17 Sep 2024 12:06 PM
Last Updated : 17 Sep 2024 12:06 PM

மோடி 3.O ஆட்சியின் 100 நாட்கள் | ‘‘உலகின் உற்பத்தி மையமாக இந்தியா மாறியுள்ளது’’: அமித் ஷா பெருமிதம்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் 3.O ஆட்சியின் நூறு நாட்களின் சாதனைகளின் வெற்றிக் கதைகளை இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய அமைச்சகங்கள், துறைகள், பாஜகவினர் பகிரத் தயாராகி வருகின்றனர். இந்த நூறாவது நாள் பிரதமர் மோடியின் பிறந்த நாளான்று வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சியின் சாதனைகளைக் கொண்டாடும் வகையில், பல்வேறு மத்திய அமைச்சகங்கள் தேசிய தலைநகரில் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துகின்றன. ஆட்சியின் மைல்கல் சாதனைகளை எடுத்துச் சொல்லும் வகையிலான கையேட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ரயில்வே துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் ஆகியோர் வெளிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா கூறுகையில், "பிரதமர் மோடியின் பிறந்த நாளை பல்வேறு நிறுவனங்கள் ‘சேவை பக்வடா’என்று கொண்டாட முடிவு செய்துள்ளன. செப்.17 முதல் அக்.2ம் தேதி வரை எங்கள் கட்சித் தொண்டர்கள் மக்களுக்கு உதவுவார்கள்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த பிரதமர் மோடி, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக மாறியிருக்கிறார். உலகின் 15 வெவ்வேறு நாடுகள் தங்கள் நாடுகளின் உயரிய மரியாதையை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளன. அவரது நீண்ட ஆயுளுக்காக 140 கோடி இந்தியர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இந்தியாவின் ஏழைகளின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்காக 10 ஆண்டுகளை அர்ப்பணித்த பின்பு இந்திய மக்கள் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கியுள்ளனர். இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் முதல் முறையாக இவ்வாறு நடந்துள்ளது. இது நாட்டில் அரசியல் ஸ்திரத்தனமை உருவாகும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. கொள்கைகள் நிறைவேற்றப்படுவதை நாம் பார்த்து வருகிறோம்.

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, நாட்டின் உள் மற்றும் வெளி பாதுகாப்பினை பலப்படுத்தி வலிமையான இந்தியாவை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளது. பிராந்திய மொழிகளுக்கு மதிப்பளிக்கும், நமது பழைய கல்வி முறைகளை உள்ளடக்கிய புதிய கல்விக் கொள்கையை மோடி வழங்கியுள்ளார்.

உலகின் உற்பத்தி மையமாக இந்தியா மாறியுள்ளது என்பதை நான் பெருமையுடன் கூற முடியும். நமது டிஜிட்டல் பிரச்சாரத்தை புரிந்துகொண்டு அதனை தங்களின் நாடுகளின் வளர்ச்சிக்கான அடிப்படையாக மாற்ற பல நாடுகள் விரும்புகின்றன. நாங்கள் ஒழுக்கத்தை கொண்டு வந்து பொருளாதாரத்தின் 13 அளவுகோள்களில் வளர்ச்சியைக் கொண்டுவந்தோம்.

விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என உலகம் ஒப்புக்கொள்கிறது. சுதந்திரத்துக்கு பின்பு, தனது வெளியுறவுக் கொள்கையில் உறுதியுடன் உள்ள ஒரு இந்திய அரசை உலகம் பார்த்திருக்கிறது. 60 கோடி இந்தியர்களுக்கு, வீடுகள், கழிப்பறைகள், எரிவாயு, குடிநீர், மின்சாரம், 5 கிலோ ரேஷன் அரசி மற்றும் 5 லட்சம் வரையிலான சுகாதார வசதிகள் வழங்கப்படுகின்றன. அடுத்தத் தேர்தலுக்குள் இந்தியாவில் சொந்த வீடில்லாமல் யாரும் இருக்கக்கூடாது என்பதே எங்களின் இலக்கு" இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.

அதேபோல், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா சேவா பக்வாடா-வின் கீழ் ரத்ததான முகாமை தொடங்கி வைக்கிறார். மேலும் அவர், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் கண்காட்சியை பாஜக தலைமையகத்தில் தொடங்கி வைக்கிறார்.

மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சர், ராஜீவ் ரஞ்சன் சிங், அமைச்சகத்தின் முதல் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி, பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் சாதனைகளை விளக்க உள்ளனர். அதேபோல் எம்எஸ்எம்இ அமைச்சர் ஜித்தன் ராம் மான்ஞ்சியும் தான் சார்ந்த துறையின் வளர்ச்சியை விளக்கி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்த இருக்கிறார்.

மோடி 3.O அரசின் 100 நாட்கள் - ஒரு பார்வை: 2024 மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் மோடி தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை கடந்து மூன்றவது முறையாக புதிய அரசை அமைத்தது. இதனைத் தொடர்ந்து மோடி மற்றும் அவரது அமைச்சரவை ஜுன்9-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டது.

ஆட்சியின் முதல் 100 நாட்கள், ஆந்திராவின் போலாவரம் பாசனத்திட்டம் உட்பட ரூ. 3 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்கட்டமைப்பு வளர்ச்சிகளால் உந்தப்படுள்ளது. சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையகள் அரசின் முதன்மையான கவனிப்பில் உள்ளன.

இதனிடையே அகமதாபாத்தில் திங்கள் கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, "எனது அரசின் மூன்றாவது ஆட்சியின் முதல் 100 நாட்களில் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) என்னைக் கேலி செய்தனர். அவமதித்தனர். ஆனால் அவர்களின் கேலிகளைக் கண்டுகொள்ளாமல், அரசு அதன் 100 நாட்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதை உறுதி செய்துள்ளது" என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் சாடல்: கூட்டணிக்கட்சிகளின் ஆதரவினை நம்பியிருக்கும் பாஜக அரசு ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க, முதல் 100 நாட்களில் அதன் முடிவுகள் சிலவற்றைத் திரும்பப் பெற்றுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

மத்திய அமைச்சகப் பணிகளில் நேரடி நியமிப்பதற்கான விளம்பரங்களை திரும்பப் பெற்றிருப்பது தவிர, ஆன்லைன் உள்ளீடுகளில் அரசின் அதிக தலையீடுகளுக்கு வழிவகுக்கும் என்ற கவலைகளுக்கு மத்தியில், ஒலிபரப்பு சேவை (ஒழுங்குமுறை) மசோதா திரும்பப்பெறப்பற்றது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா ஷ்ரினேட், முதல் நாளில் இருந்தே தான் ஒரு பலவீனமான பிரதமர் என்பதை நிரூபித்து வந்த மோடி, யு டர்ன் அடிப்பதில் சாதனை படைத்துள்ளார் என்று விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x