Published : 17 Sep 2024 04:51 AM
Last Updated : 17 Sep 2024 04:51 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில்கணவன் தினமும் குளிக்காமல் கங்கை நீரை மட்டும் தலையில் தெளித்து கொள்வதால் உடல்துர்நாற்றத்தை தாங்க முடியவில்லை என கூறி மனைவி விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ராவைச் சேர்ந்த பெண்ணுக்கு அண்மையில் திருமணமாகியுள்ளது. வண்ண கனவுகளுடன் வாழ்க்கை பயணத்தை தொடங்கிய அந்த பெண்ணுக்கு அவரது கணவர் ராஜேஷ் உருவில் சோதனை ஆரம்பமாகிவிட்டது. ராஜேஷ் மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே குளிக்கும் பழக்கமுடையவர். மற்ற நாட்களில் கங்கை நீரை தலையில் தெளித்துக் கொண்டால் போதும் புனிதமாகி விடுகிறோம் என்பது அவரது நம்பிக்கை. ஆனால், கணவரிடமிருந்து வரும் உடல் துர்நாற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் மனைவி அவரை குளிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் கல்யாணமாகி 40 நாட்களில் 6 முறை மட்டுமே ராஜேஷ் குளித்துள்ளார்.
அவரின் இந்த வினோதமான பழக்கத்தால் உடல் நாற்றத்தை பொறுக்க முடியாமல் மனம் உடைந்த மனைவி விவாகரத்து செய்ய முடிவெடுத்து நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி வருவது ஊடகங்களில் பரபரப்பு செய்தியாகி உள்ளது. இதுகுறித்து குடும்ப நல ஆலோசகரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: பெண்ணின் குடும்பத்தினர் வரதட்சணை துன்புறுத்தல் புகார்அளித்து விவாகரத்து கோரியுள்ளனர். அந்த பெண் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். கணவர்மனம் திருந்தி அவரது சுகாதாரத்தை மேம்படுத்த ஒப்புக்கொண்டார். இருப்பினும் அந்த பெண் இனி அவருடன் வாழ விரும்ப வில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அந்த தம்பதி ஒரு வாரத்துக்குள் ஆலோசனை மையத்துக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வினோத விவாகரத்து: ஆக்ராவில் இதுபோன்ற மற்றொரு விசித்திரமான விவாகரத்து வழக்கு அண்மையில் பதிவானது. குர்குரே சிற்றுண்டிக்கு அடிமையான பெண் தனது கணவரிடம் தினமும் வீட்டுக்கு வரும்போது ரூ.5 விலையில் விற்கப்படும் குர்குரேவை கட்டாயம் வாங்கிவரவேண்டும் என கூறியுள்ளார். ஒரு நாள் குர்குரே பாக்கெட்டை வாங்கி வர கணவர் மறந்துவிட்டார். இதனால், ஏற்பட்ட தகராறில் கணவரிடமிருந்து விவாகரத்து கேட்டு மனைவி விண்ணப்பித்த சம்பவம் இவ்வாண்டு தொடக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அதே ஆக்ராவில் இப்படி ஒரு வினோத விவாகரத்து வழக்கு பதிவாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...