Published : 17 Sep 2024 04:06 AM
Last Updated : 17 Sep 2024 04:06 AM

நாட்டில் முதல்முறையாக குஜராத்தில் ‘நமோ பாரத்’ விரைவு மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து காந்தி நகருக்கு புதிய மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார். உடன் ஆளுநர் ஆச்சார்ய தேவவிரத், முதல்வர் பூபேந்திர படேல்.

அகமதாபாத்: நாட்டில் முதல்முறையாக குஜராத்தின் அகமதாபாத் - புஜ் நகரங்களுக்கு இடையே ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் ரூ.8,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது: மத்தியில் தொடர்ச்சியாக 3-வது முறை பாஜக கூட்டணி ஆட்சி அமைத்து புதிய வரலாறு படைத்துள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது அறிமுகம் செய்யப்படும் நமோ பாரத் ரேபிட் ரயில் திட்டத்தால், ஒருநகரில் இருந்து மற்றொரு நகருக்கு விரைவாக செல்ல முடியும். முதல்கட்டமாக அகமதாபாத் - புஜ் இடையே இந்த ரயில்சேவை தொடங்கப்படுகிறது. படிப்படியாக நாடு முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

நாடு சுதந்திரம் அடைந்தபோது, 500-க்கும் மேற்பட்ட பிராந்தியங்கள் இருந்தன. அவற்றை சர்தார் படேல் ஒன்றிணைத்தார். ஆனால், இப்போது அதிகாரஆசை கொண்ட சிலர், நாட்டை பிளவுபடுத்த விரும்புகின்றனர். அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிஎம் சூர்ய மின் சக்தி திட்டத்தில் அகமதாபாத்தில் சூரிய மின் தகடுகள் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது, திட்ட பயனாளிகளுடன் அவர் சிறிது நேரம் கலந்துரையாடினார். அகமதாபாத் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தில் அகமதாபாத் ஏபிஎம்சி-யில் இருந்து காந்திநகர் வரை33 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தட மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பிரதமர், மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

வந்தே மெட்ரோ பெயர் மாற்றம்: நாட்டில் முதல்முறையாக நமோ பாரத் ரேபிட் ரயில் சேவையை பிரதமர் மோடி அகமதாபாத்தில் தொடங்கிவைத்தார். இந்த ரயில் அகமதாபாத் முதல் புஜ் வரை இயக்கப்படும். முதலில் ‘வந்தே மெட்ரோ’ என்று பெயரிடப்பட்டிருந்த இந்த ரயில் சேவை, தற்போது ‘நமோ பாரத்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அகமதாபாத்தில் இருந்து புஜ் நகரம் 360 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த தொலைவை 5 மணி நேரம் 45 நிமிடங்களில் நமோ பாரத் ரயில் கடக்கும். அதிகபட்சமாக மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் செல்லும். 1,150 பேர் அமர்ந்தும், 2,058 பேர் நின்று கொண்டும் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

20 பெட்டியுடன் வந்தே பாரத்: நாக்பூர்- செகந்திராபாத், கோலாப்பூர் - புனே, ஆக்ரா கன்டோன்மென்ட் - பனாரஸ், துர்க் - விசாகப்பட்டினம், புனே - ஹுப்பள்ளி ஆகிய நகரங்களுக்கு இடையே புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டில் முதல்முறையாக வாராணசியில் இருந்து டெல்லி வரை 20 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயில் சேவையையும் அவர் தொடங்கிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x