Published : 17 Sep 2024 05:45 AM
Last Updated : 17 Sep 2024 05:45 AM
மும்பை: மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் அளித்த தீர்ப்பில், “சிறிது காலத்திற்கு முன்பு, இந்த நீதிமன்றம் சிபிஐ கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாகஉள்ளது என்று கருத்து தெரிவித்தது. அந்த கருத்தை மாற்றும் வகையில் சிபிஐ செயல்பட வேண்டியது அவசியம்” என்று அறிவுறுத்தினார். உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கருத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது கேள்விகளை எழுப்புவதால் அவர் பதவி விலக வேண்டும் என்று டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் கோரினார்.
மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது: நாட்டின் நீதித்துறை, சட்டப்பேரவை மற்றும் நிர்வாக அமைப்புகளுக்கு ஒரே நோக்கமே உள்ளது.அரசியலமைப்பின் அடிப்படை உணர்வின் வெற்றியை உறுதிப்படுத்துவது, எளிய மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் உத்தரவாதம் செய்வது மற்றும் இந்தியா செழித்து வளர உதவுவது இந்த நோக்கங்கள் ஆகும்.
ஜனநாயக விழுமியங்களையும் அரசியலமைப்பு விழுமியங் களையும் வளர்ப்பதற்கும் மலரச்செய்வதற்கும் இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு அமைப்பானது சிலவரம்புகளை உணர்ந்து செயல்படும்போது அது சிறப்பாக செயல்படுகிறது. சில வரம்புகள் வெளிப்படையானவை. சில வரம்புகள் மிகச் சிறந்தவை, அவை நுட்பமானவை.
நீதித்துறை, சட்டப்பேரவை, நிர்வாக அமைப்பு ஆகிய இந்த புனிதமான தளங்கள் அரசியல் ஆவேச விவாதங்களுக்கு இடமளிப்பதாக இருக்க வேண்டாம். அதுபோல சவாலான சூழலில் தேசத்திற்கு சிறப்பாக சேவையாற்ற நிறுவப்பட்ட அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் கருத்துகளுக்கு இடமளிக்க வேண்டாம்.
தேர்தல் ஆணையம், விசாரணை அமைப்புகள் உள்ளிட்ட நமது அமைப்புகள் கடினமான சூழலில் தங்கள் கடமையை செய்கின்றன. ஒரு விமர்சனம் அவற்றின் உணர்வை பாதிக்கச் செய்யும். அரசியல் விவாதங்களுக்கு வழிவகுக்கும். எனவே நமது அமைப்புகள் பற்றி நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இவ்வாறு குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...