Published : 16 Sep 2024 05:33 PM
Last Updated : 16 Sep 2024 05:33 PM

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நாளை மாலை பதவி விலகல்: ஆம் ஆத்மி தகவல்

முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்

புதுடெல்லி: டெல்லி ஆளுநர் வி.கே.சக்சேனாவை, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நாளை (செப்.17) மாலை 4.30 மணி அளவில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குவார் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது. ‘ஆளுநரை சந்திக்க கேஜ்ரிவால் நேரம் கேட்டிருந்தார். நாளை மாலை 4.30 மணிக்கு சந்திப்புக்கு ஆளுநர் நேரம் ஒதுக்கி உள்ளார். அப்போது, முதல்வர் கேஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவார்’ என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்த மார்ச் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த 13-ம் தேதி அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். எனினும் முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக் கூடாது. ஆளுநரின் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மத்தியில் நேற்று (செப்.15) பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், "அடுத்த 2 நாட்களில் டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்வேன். ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் புதிய முதல்வரை தேர்வு செய்வார்கள். நான் நேர்மையற்றவன், ஊழல்வாதி என்று பாஜக குற்றம் சாட்டுகிறது. எனவே, அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை நான் முதல்வர் பதவியில் அமர மாட்டேன். டெல்லியின் ஒவ்வொரு தெரு, ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வேன். நான் நேர்மையானவன் என்று மக்கள் நினைக்கிறார்களா என்பதை அவர்களிடமே கேட்பேன். நான் நேர்மையானவன் என கருதி மக்கள் எனக்கு வாக்களித்து மீண்டும் முதல்வராக்கிய பிறகே முதல்வர் இருக்கையில் அமர்வேன்" என அறிவித்தார்.

இதனையடுத்து, ஆளுநரை சந்திக்க கேஜ்ரிவால் நேரம் கேட்டிருந்தார். நாளை (செப்.17) மாலை 4.30 மணிக்கு சந்திப்புக்கு ஆளுநர் நேரம் ஒதுக்கி உள்ளதாகவும், அப்போது, முதல்வர் கேஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவார் என்றும் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இதனிடையே, இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ், "முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் அரவிந்த் கேஜ்ரிவாலின் அறிவிப்பு குறித்து டெல்லி மக்களிடையே ஆழமான விவாதம் நடந்து வருகிறது. ஜாமீன் கிடைத்த பிறகும் ராஜினாமா செய்யும் முதல்வரை டெல்லி முதன்முறையாக பார்க்கிறது.

இதுவரை மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் ஓட்டு கேட்பவர்களை நாடு பார்த்துள்ளது. ஆனால், நான் நேர்மையானவனாக இருந்தால் எனக்கு வாக்களியுங்கள் என்று ஒரு முதல்வர் சொல்வது இதுவே முதல்முறை. விரைவில் தேர்தல் நடத்த வேண்டும், ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்து கேஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்குவோம் என்று கூறுகிற அளவுக்கு டெல்லி மக்களிடையே வேகம் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் டெல்லி மக்கள் பாஜகவுக்கு ஒரு ஓட்டு கூட கொடுக்க மாட்டார்கள். கெஜ்ரிவாலுக்கு எதிராக பாஜக தீட்டிய சதியால் பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். திரேதாயுகத்தில், பகவான் ஸ்ரீ ராமர் சூழ்நிலை காரணமாக அரியணையைத் துறந்தார். இதனால் அயோத்தி மக்களும் மிகுந்த சோகத்தில் இருந்தனர். இப்போது ஸ்ரீ ராமர் மற்றும் ஹனுமின் பக்தரான அரவிந்த் கேஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

முதல்வர் கேஜ்ரிவால் நாளை (செவ்வாய்கிழமை) தனது ராஜினாமாவை வழங்குவார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டதும், எங்கள் சட்டமன்றக் கட்சி கூட்டம் கூடி, புதிய தலைவரை தேர்வு செய்யும். அதன்பிறகு, சட்டமன்றக் கட்சித் தலைவர், குடியரசுத் தலைவரிடம் துணைநிலை ஆளுநர் மூலம் உரிமை கோருவார். அதன்பிறகு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வார். இந்த நடைமுறைகளுக்கு ஒரு வாரம் ஆகலாம்" என தெரிவித்தார்.

புதிய முதல்வர் யார்? - அடுத்த 5 மாதங்களில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே முதல்வர் கேஜ்ரிவால் ராஜினாமா முடிவை அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முதல்வர் பதவியை ஏற்க மறுத்துவிட்டாராம். எனவே, கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா புதிய முதல்வராக பதவியேற்கக் கூடும். அவர் மறுத்தால், ஆதிஷி, கைலாஷ் கெலாட், கோபால் ராய், சவுரப் பரத்வாஜ் ஆகியோரில் ஒருவர் டெல்லி முதல்வராக பதவியேற்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜக விமர்சனம்: பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி கூறும்போது, “அரவிந்த் கேஜ்ரிவாலின் நேர்மை கேள்விக்குறியாகி மக்களை ஏமாற்ற அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இது அரசியல் நாடகம். கடந்த காலத்தில் மன்மோகன் சிங்கை பிரதமராக்கிய சோனியா, அவரை கைப்பாவை போன்று இயக்கினார். இதே பாணியை கேஜ்ரிவாலும் பின்பற்றுகிறார்” என்றார்.

டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறும்போது, “கடந்த மக்களவைத் தேர்தலின்போதே மக்கள் தங்கள்தீர்ப்பை அளித்து விட்டனர். டெல்லியில் ஆம் ஆத்மிக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அந்த கட்சிக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள்” என்று தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீட்சித் கூறும்போது, “கேஜ்ரிவாலை ஊழல்வாதியாகவே உச்ச நீதிமன்றம் பாவிக்கிறது. அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே வலியுறுத்தினோம். இப்போது அவர் அரசியல் நாடகமாடுகிறார்" என்று குற்றம் சாட்டினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x