Published : 16 Sep 2024 05:16 AM
Last Updated : 16 Sep 2024 05:16 AM
ஸ்ரீநகர்: காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லாவும் மெகபூபா முப்தியும் பொம்மைகள் என அவாமி இட்டிஹாட் கட்சி (ஏஐபி) எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் விமர்சித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 கட்டமாக தேர்தல்நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தீவிரவாத செயலுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலிருந்த இட்டிஹாட் கட்சி (ஏஐபி) எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத், தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரிப்பதற்காகவே ரஷீத் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் பாஜகவின் பி டீம் எனகாஷ்மீர் முன்னாள் முதல்வர்களான தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லாவும் மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தியும் குற்றம் சாட்டினர்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், ஷேக் அப்துல் ரஷீத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மத்தியில் ஆளும் பாஜகவின் துன்புறுத்தலை எதிர்கொண்ட ஒரே முக்கிய தலைவர் நான் மட்டுமே. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபோது, உமர்அப்துல்லாவும் மெகபூபா முப்தியும் பல மாதங்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், நான் மட்டுமே திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தேன்.
உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தி ஆகிய இருவருமே 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீர் மக்களிடம் தோற்றுவிட்டனர். உமர் அப்துல்லா மகாத்மாக காந்தியாகவோ சுபாஷ் சந்திரபோஸ் ஆகவோ ஆக முடியாது. இதுபோல மெகபூபா முப்தி ராணியாகவோ (ரசியா சுல்தான்) மியான்மரின் ஆங் சான் சூ கியாகவோ ஆக முடியாது. அவர்கள் பொம்மைகள். ரப்பர் ஸ்டாம்ப் போன்றவர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். சமீபத்தில் நடந்த மக்களவைத்தேர்தலில், பாரமுல்லா தொகுதியில் சிறையிலிருந்தபடியோ போட்டியிட்ட ரஷீத் 2,04,142 வாக்குகள் வித்தியாசத்தில் உமர் அப்துல்லாவை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT