Published : 16 Sep 2024 04:29 AM
Last Updated : 16 Sep 2024 04:29 AM
புதுடெல்லி: டாடா நகர் - பாட்னா, கயா - ஹவுரா உட்பட 6 வழித்தடங்களில் வந்தே பாரத்ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.
டாடா நகர் - பாட்னா, பாகல்பூர் - தும்கா - ஹவுரா, பிரமாபூர் - டாடாநகர், கயா - ஹவுரா, தியோகர் - வாராணசி மற்றும் ரூர்கேலா - ஹவுரா ஆகிய 6 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பேசியதாவது:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் 6 வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.650 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் மூலம் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதி மேம்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜார்க்கண்ட் பின்தங்கிஇருந்தது. ஆனால் அனைவரும் இணைந்து அனைவரும் வளமடைவோம் என்ற எங்கள் முழக்கம் அனைத்தையும் மாற்றிவிட்டது. இப்போது ஏழைகள், பழங்குடியினர், தலித்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
எனவேதான் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு வந்தே பாரத் ரயில்கள் மற்றும்நவீன உள்கட்டமைப்பு வசதிகள் கிடைத்துள்ளன. இது கிழக்கு மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும். வந்தே பாரத் ரயில் மூலம் வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பயனடைவார்கள். மேலும், தியோகர் (வைத்யநாதர் கோயில்), வாராணசி (காசி விஸ்வநாதர் கோயில்) மற்றும் கொல்கத்தா (காளி மற்றும் பேலூர் மாதா கோயில்) உள்ளிட்ட நகரங்களை இணைப்பதால் ஆன்மிக சுற்றுலாவையும் இது ஊக்குவிக்கும். தன்பாத் (நிலக்கரி சுரங்கங்கள்), கொல்கத்தா (சணல் தொழிற்சாலைகள்), துர்காபூர் (இரும்பு ஆலை)உள்ளிட்ட நகரங்களையும் இந்த ரயில்கள் இணைக்கும். இதனால் தொழில் துறையினர் பயனடைவர். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT