Published : 28 Jun 2018 04:05 PM
Last Updated : 28 Jun 2018 04:05 PM
பாகிஸ்தான் எல்லையில் இருந்து, வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த 11-வயது சிறுவனுக்கு புதுஉடைகள், இனிப்புகள் கொடுத்து மீண்டும் பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய ராணுவத்தினர் ஒப்படைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த 24-ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து 11-வயது சிறுவன் வழிதவறி, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் தேக்வார் பகுதிக்குள் நுழைந்துவிட்டார். இந்த சிறுவனைப் பிடித்த பாதுகாப்பு படையினர் காஷ்மீர் போலீஸிடம் ஒப்படைத்தனர்.
அந்தச் சிறுவனிடம் விசாரணை நடத்தியதில், பாகிஸ்தான் ஆக்கமிரப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், பெயர் முகமது அப்துல்லா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை மீண்டும் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளைச் செய்தனர். சிறுவன் என்பதால், மனிதநேய அடிப்படையில் கைதுசெய்யவில்லை.
இந்நிலையில், கடந்த 3 நாட்களாக காஷ்மீர் போலீஸாரிடம் வசம் இருந்த முகம்மது அப்பதுல்லாவை நேற்று பாகிஸ்தான் அதிகாரிகளிடம் முறைப்படி இந்திய ராணுவத்தினர் ஒப்படைத்தனர். அந்தச்சிறுவனை ஒப்படைக்கும் போது, புதிய ஆடைகள், இனிப்புகள், விளையாட்டுப் பொருட்களை வாங்கி அந்தச்சிறுவனை மகிழ்ச்சியுடன் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தினர் அனுப்பிவைத்தனர்.
இது குறித்து ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், காஷ்மீர் போலீஸார் சிறுவன் முகமது அப்துல்லாவை எங்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர். மனித நேய அடிப்படையிலும் சிறுவன் என்பதாலும் அவரைக் கைது செய்யவில்லை. சிறுவன் வழிதவறி வந்த செய்தியை பாகிஸ்தான்ராணுவத்துக்கு தெரிவித்துத் திரும்ப அனுப்புவதற்கான அரசுமுறை பணிகளைத் தொடர்ந்தோம்.
அந்தச் சிறுவனின் உடைகள் அழுக்காக இருந்ததால், அவனுக்கு புதிய உடைகள்எடுத்துக்கொடுத்து, தேவையான இனிப்புகள், சாக்லேட்டுகள், விளையாட்டுப்பொருட்கள் வாங்கிக் கொடுத்து பாகிஸ்தான் ராணுவத்திடம் அனுப்பிவைத்தோம். இந்திய ராணுவத்தின் இந்த மனிதநேய நடவடிக்கை எதிர்காலத்தில் இரு நாட்டுராணுவத்துக்குள் அமைதியை உருவாக்கும். இந்திய ராணுவம் ஒருபோதும் அப்பாவி பொதுமக்கள் மீது எந்தவிதமான தாக்குதலையும் மேற்கொள்ளாது. மனித உயிர்களுக்கு மதிப்பளித்து நடக்கும் எனத்தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT