Published : 15 Sep 2024 05:58 PM
Last Updated : 15 Sep 2024 05:58 PM
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் ராஜினாமா முடிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ள பாஜக, “அவர் சொல்லியிருக்கும் 48 மணி நேர அவகாசத்தின் மர்மம் என்ன? அந்த நேரத்துக்குள் அவர் மாற்று ஆள் ஒருவரைத் தேடுகிறார் அல்லது சில மாற்றங்களைச் செய்ய விரும்புகிறார்” என்று விமர்சித்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதான்ஷு திரிவேதி செய்தியாளர்களிடம் கூறுகையில், “சட்டப்பேரவையில் பெரும்பான்மையுடன் இருக்கும் ஒரு கட்சியின் முதல்வருக்கு இது கேலிக்கூத்தான விஷயம். அவரின் நோக்கம் மற்றும் சொல்லில் கொஞ்சமாவது உண்மை இருந்தால், அவர் உடனடியாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சரவையை கலைக்க பரிந்துரைக்க வேண்டும்.
அவர் சிறையில் இருந்து வெளியே வந்தததும் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் தனது சொந்த அரசு உருவாக்கிய விதியை மீறிய முதல் முதல்வராக கேஜ்ரிவால் இருக்கிறார். டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்து டெல்லி அரசு முடிவெடுத்திருந்தது. கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்ததும் அரசின் முடிவினை மீறியுள்ளார்.
நீங்கள் (அரவிந்த் கேஜ்ரிவால்) வெளியே வந்ததும் ஏன் ராஜினாமா பற்றி பேசுகிறீர்கள். 48 மணி நேரம் கழித்து என்ன இருக்கிறது? நாட்டு மக்களும் டெல்லி மக்களும் 48 மணிநேர ரகசியம் குறித்து அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். இந்த 48 மணி நேரத்துக்குள் என்னவெல்லாம் தீர்க்கப்பட இருக்கிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி பாஜக தலைவர் விரேந்திர சச்தேவா, “அரவிந்த் கேஜ்ரிவாலிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி உள்ளது. நீங்கள் டெல்லி மதுபான கொள்கை ஊழலில் ஈடுபடவில்லை என்றால், அந்த கொள்கை ஏன் திரும்பப் பெறப்பட்டது. ஒட்டுமொத்தக் கட்சியும் மதுபான கொள்கை ஊழலில் ஈடுபட்டுள்ளது. அதனால்தான் அவர்கள் (ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள்) சிறைக்கு அனுப்பப்பட்டனர். டெல்லி மக்களை நீங்கள் சுரண்டி விட்டீர்கள் என்று அவர்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜினாமா முடிவு குறித்து கேஜ்ரிவால் கூறியது என்ன?: “இன்னும் 2 நாட்களில் நான் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன். இனி முதல்வர் நாற்காலியில் இருக்கப்போவதில்லை. ஆம் ஆத்மி கட்சியின் எதிர்காலம் வாக்காளர்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கிறது. நான் டெல்லியின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று பேசுவேன். வாக்களித்து மக்கள் மீண்டும் என்னை டெல்லி முதல்வராக்கிய பின்பே முதல்வர் இருக்கையில் அமர்வேன்.” என்று தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT