Published : 15 Sep 2024 12:50 PM
Last Updated : 15 Sep 2024 12:50 PM
புதுடெல்லி: அடுத்த 48 மணி நேரத்தில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் இன்னும் 2 தினங்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன். இனி முதல்வர் நாற்காலியில் நான் அமரப்போவதில்லை. ஆம் ஆத்மி கட்சியின் எதிர்காலம் வாக்காளர்கள் கைகளில் ஒப்படைக்கப்படுகிறது. இனி நான் டெல்லியின் ஒவ்வொரு தெருவிலும் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் செல்வேன். மக்கள் எனக்கு வாக்களித்து மீண்டும் என்னை டெல்லி முதல்வராக்கிய பின்னரே முதல்வர் இருக்கையில் அமர்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் அவருக்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்.13-ம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அவருக்கு ஜாமீனுடன் பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இந்நிலையில், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முதல்வர் கேஜ்ரிவால் தார்மிகப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தன. கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்குள் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். இதனால் டெல்லி அரசியல் சூழலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்தது என்ன? ராஜினாமா முடிவை அறிவித்துள்ள முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “அடுத்து வரும் இரு தினங்களில் அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படும். அந்தக் கூட்டத்தில் கட்சியில் இருந்து ஒருவரை முதல்வராக அறிவிக்கவுள்ளோம். எனினும் மணீஷ் சிசோடியா முதல்வராக இருக்க மாட்டார். அவரிடம் நான் இது குறித்துப் பேசினேன். அவரும் என்னைப் போலவே ‘மக்கள் நம் நேர்மையை அங்கீகரிக்கட்டும்’ என்று கூறிவிட்டார். இனி எனது விதியும், சிசோடியும் விதியும் மக்கள் கைகளில்தான் இருக்கின்றன.
நான் கைது செய்யப்பட்டபோது ஏன் ராஜினாமா செய்யவில்லை என்றால், அப்போது நான் அரசமைப்பைக் காப்பாற்ற வேண்டும் என நினைத்தேன். அதனால் ராஜினாமா அழுத்தங்களை ஏற்கவில்லை. இப்போதும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் பினராயி விஜயன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது அவர்கள் (மத்திய அமைப்புகள்) வழக்குத் தொடர்ந்துள்ளன. பாஜக அல்லாத கட்சியின் முதல்வர்களே, அவர்கள் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தால் தயவு செய்து ராஜினாமா செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
மத்திய அரசின் சதிகளால் என்னுடைய பாறை போன்ற உறுதிப்பாட்டை தகர்க்க முடியாது. தேசத்துக்கான எனது போராட்டம் தொடரும்.” என்றார்.
சிறைவாசம் குறித்து நினைவுகூர்ந்து கருத்து தெரிவித்த கேஜ்ரிவால், “நான் சிறையில் இருந்து ஒரே ஒரு கடிதம் மட்டுமே எழுதினேன். அதுவும் சுதந்திர தின நாளில் நான் இல்லாத நிலையில் அமைச்சர் அதிஷி தேசியக் கொடியை ஏற்ற அனுமதிக்கக் கோரி துணை நிலை ஆளுநருக்கு எழுதினேன். அந்தக் கடிதம் திரும்பிவந்துவிட்டது. மீண்டும் கடிதம் எழுதினால் நான் எனது குடும்பத்தாரைக் காண முடியாது என்ற எச்சரிக்கையும் எனக்கு விடுக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...