Published : 15 Sep 2024 05:50 AM
Last Updated : 15 Sep 2024 05:50 AM
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை பாஜகவினர் கிண்டல் செய்து வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கவுதம் புத்த நகர் மாவட்ட ஆட்சியரான மணீஷ் குமார் வர்மாவின் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் ராகுல் காந்தியை பப்பு என்று அழைத்து கருத்து பதிவிட்டிருந்தார். ஆனால் சில மணி நேரத்தில் அந்தப் பதிவு நீக்கப்பட்டது.
இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்கூறும்போது, “கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் அதிகாரத்துவம் மற்றும் அரசியல் சாராத அதிகாரிகளின் அதிகரித்து வரும் அரசியல்மயமாக்கலை இது எடுத்துக்காட்டுகிறது. ராகுல் காந்தியை பப்பு என்று அழைத்த மாவட்ட ஆட்சியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேத் கூறும்போது,“மணீஷ்குமார் வர்மா, நொய்டா உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய கவுதம் புத்த நகர் மாவட்டத்தின் ஆட்சியர். முழு மாவட்டத்துக்கும் அவர்தான் பொறுப்பு. நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியை கிண்டல் செய்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை தேவை. இது பாஜகவினரின் நடவடிக்கைதான். தற்போது மக்கள் பிரதிநிதிகள் மீது வெறுப்புணர்வை தூண்டும் விதத்தில் கருத்துகளை அவர்கள் வெளியிடுகின்றனர்” என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறும்போது, “பாஜக தலைமையிலான ஆட்சியில் இதுபோன்ற அரசியல் கருத்துகளை வெளியிட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தற்போது உத்தரவிடப்படுகிறதா?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் விளக்கம்: ஆட்சியர் மணீஷ் குமார் வர்மாஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, “என்னுடைய எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தை சமூக விரோதிகள் ஹேக்கிங் செய்து ராகுல் காந்திதொடர்பாக அவதூறான கருத்தை் பதிவிட்டுள்ளனர்.
வழக்கு பதிவு: இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) போலீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து சைபர் கிரைம் பிரிவினர் விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுதொடர்பான எப்ஐஆர்-ஐயும் இதில் வெளி யிட்டுள்ளேன்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT