Last Updated : 28 Jun, 2018 02:54 PM

 

Published : 28 Jun 2018 02:54 PM
Last Updated : 28 Jun 2018 02:54 PM

மும்பையில் கட்டிடம் மீது விமானம் மோதி நொறுங்கியது: 5 பேர் பலி

மும்பையில் உள்ள காட்கோபர் பகுதியில் இன்று நண்பகலில் சிறியரக விமானம் ஒன்று கட்டிடத்தின் மீது மோதி நொறுங்கியது. இதில் பயணம் செய்தவர்களில் 5 பேர் பலியானாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் மையப்பகுதியான காட்கோபர் பகுதி, சர்வோதயா நகரில் மக்கள் இன்று வழக்கம்போல் பணிகளை பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது பிற்பகல் 1.30 மணி அளவில் சிறிய ரக விமானம் ஒன்று சர்வோதயா நகரில் உள்ள கட்டிடத்தின் மீது மோதி விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானம் மோதிய வேகத்தில் உடைந்து சிதறி, தீப்பற்றியது. இது குறித்து போலீஸுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுவரை 5 பேரை விமானத்தில் இருந்து மீட்டு சர்வோதாயா நகரில் உள்ள மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து சர்வோதயா நகர போலீஸார் கூறுகையில், இந்த விமானம் உத்தரப்பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. விடி-யுபிஇசட், கிங் ஏர் சி90 வகை விமானமாகும். இந்த விமானம் உத்தரப்பிரதேச அரசிடம் இருந்து தனியார் ஒருவருக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 5 பேர் இறந்துவிட்டதாக முதல்கட்டத் தகவல் கிடைத்துள்ளது எனத் தெரிவித்தார்.

இது குறித்து உத்தரப்பிரதேச முதன்மைச் செயலாளர் அவினிஷ் அவஸ்தி கூறுகையில், மும்பையில் கட்டிடத்தின் மீது மோதி விழுந்த விமானம் மாநில அ ரசுக்கு சொந்தமானதல்ல. இதை மும்பையில் உள்ள யுஓய் நிறுவனத்துக்கு விற்றுவிட்டோம் எனத் தெரிவித்தார்.

மும்பையில் விமானம் விழுந்த பகுதியில் தீயணைப்புத் துறையினர், பேரிடர் மீட்புப்பகுழுவினர் ஆகியோருடன் இணைந்து போலீஸாரும் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று மும்பை நகர 7-வது மண்டல இணை ஆணையர் அகிலேஷ் சிங் தெரிவித்தார்.

சர்வோதயா நகரைச் சேர்ந்த பிரதீப் பட்நேகர் கூறுகையில், நான் வீட்டில் இருந்தபோது, திடீரென மிகப்பெரியசத்தம் கேட்டது. உடனே வெளியே சென்றுபார்த்தபோது, கட்டிடம் உள்ள பகுதி புகைமண்டலமாக காட்சி அளித்தது. அதன்பின் சிறிது நேரத்துக்கு பின்புதான் அங்கு விமானம் விழுந்துவிட்டது என்றுஅனைவருக்கும் தெரிந்தது. மேலும், விமானம் விழுந்தபோது சாலையில் நடந்து சென்றவர் ஒருவரும் பலியானார் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x