Published : 20 Jun 2018 08:06 AM
Last Updated : 20 Jun 2018 08:06 AM
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகம விதிகளின்படி 2 ஆண்டுக்கு ஒரு முறை, 2 பிரம்மோற்சவங்கள் நடத்துவது ஐதீகம். அதன்படி இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து நேற்று திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு தலைமையில் அனைத்து துறை தலைமை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதன் பின்னர் அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்த ஆண்டு திருமலையில் 2 பிரம்மோற்சவங்கள் நடத்தப்பட உள்ளது. இதில் முதலாவதாக, வருடாந்திர பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 13-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது. கருட சேவை 17-ம் தேதி இரவு நடத்தப்படுகிறது. 18-ம் தேதி தங்க ரதம், 20-ம் தேதி தேர்த் திருவிழா மற்றும் 21-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அக்டோபர் 10-ம் தேதி முதல், 18ம் தேதி வரை 2-வதாக நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதில் அக்டோபர் 14-ம் தேதி கருட சேவை, 17-ம் தேதி தங்க தேர் ஊர்வலம், 18-ம் தேதி சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடைபெறும்
இவ்வாறு ஸ்ரீநிவாச ராஜு தெரிவித்தார்.
ஏழுமலையானை தரிசிக்க ரம்ஜான் விடுமுறையிலிருந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. மேலும், வெயில் காரணமாக ஆந்திராவில் 3 நாட்கள் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. எனவே, நேற்று திருமலையில் மீண்டும் கூட்டம் அதிகரித்தது. நேற்று சர்வ தரிசனம் மூலம் சுவாமியை தரிசிக்க 24 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT