Published : 14 Sep 2024 05:08 AM
Last Updated : 14 Sep 2024 05:08 AM
புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றது விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவர் அளித்த இஃப்தார் விருந்து புகைப்படத்தை பாஜக பகிர்ந்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கடந்த புதன்கிழமை டெல்லியில் உள்ள தனது வீட்டில் விநாயகர் பூஜை நடத்தினார். இந்த பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு ஆரத்தி எடுத்து வழிபட்டார். இச்சம்பவத்தை எதிர்க்கட்சித் தலைவர்களும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும் விமர்சனம் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது அவர் அளித்த இஃப்தார் விருந்தில் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் அழைக்கப்பட்டிருந்தார். இஃப்தார் விருந்தில் பிரதமரும் தலைமை நீதிபதியும் பேசும்போது எடுத்த புகைப்படத்தை பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஜாத் பூனாவாலா பகிரந்துள்ளார்.
அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள்: அவர் தனது பதிவில், ‘‘நீதித்துறை பத்திரமாக இருந்ததாக எதிர்க்கட்சிகள் அப்போது நினைத்தன. இப்போது சமரசம் செய்துகொண்டதாக கருதுகின்றன’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக பாஜக எம்.பி. சாம்பிட் பத்ராவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “ஜனநாயகத்தின் வெவ்வேறு தூண்கள் ஒன்று சேரக் கூடாதா? அவர்கள் எதிரிகளாக இருக்க வேண்டுமா? அவர்கள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தாமல் இருக்க வேண்டுமா? கடமையில் இருக்கும்போதும் கடமையில் இல்லாதபோதும் வெவ்வேறு விதமாக இருப்பதுதான் ஜனநாயகத்தின் அழகு” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT