Published : 13 Sep 2024 06:48 PM
Last Updated : 13 Sep 2024 06:48 PM

“தேச விரோத செயல்!” - அமெரிக்காவில் ராகுல் பேசிய கருத்துகளுக்கு குடியரசு துணைத் தலைவர் கண்டனம்

புதுடெல்லி: அரசியல் சாசன பதவியில் இருப்பவர் தேசத்துக்கு சிக்கலை ஏற்படுத்துவது வேதனை அளிப்பதாக குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். அஜ்மீரில் உள்ள ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று (13.09.2024) உரையாற்றிய ஜக்தீப் தன்கர், ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் அவரது பேச்சு குறித்து விமர்சித்தார். "அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநிறுத்துவதாக உறுதிமொழி எடுத்துக் கொண்ட போதிலும், தேசத்துக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் சில தனிநபர்கள் செயல்படுவது கவலை அளிக்கிறது. இது வெறுக்கத்தக்க, கண்டிக்கத்தக்க, தேச விரோத செயல்.

தேசிய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். நாட்டின் நலன்களுக்கு எதிராக செயல்படுவோர்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. நாட்டின் எல்லைகளைத் தாண்டி அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு இந்தியரும், நமது கலாச்சாரம் மற்றும் தேசியத்தின் தூதர். இதற்கு உதாரணமாக அடல் பிகாரி வாஜ்பாய் திகழ்ந்தார். நரசிம்ம ராவ் பிரதமராக இருந்தபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வாஜ்பாய், உலக அரங்கில் பல்வேறு நாடுகளில் பேசியபோது, இந்தியாவின் நலன்கள் குறித்து பேசினார். இந்தியாவுக்கு எதிராக அவர் ஒருபோதும் பேசவில்லை. அரசியல் கட்சிகளின் சித்தாந்தங்கள் மாறுபட்டபோதும், தேசிய உணர்வுடன் செயல்பட வேண்டும்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை சிறப்பு வாய்ந்தது. புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள் அதை ஏற்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்புடையது அல்ல. அது தேசிய முன்முயற்சி. சமூக மாற்றத்திற்கான கருவியாக கல்வி உள்ளது. சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடுவதற்கான கருவியாகவும் அது செயல்படுகிறது" என ஜக்தீப் தன்கர் உரையாற்றினார்.

ராகுல் கருத்துகளால் சலசலப்பு: அமெரிக்கா சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் முக்கியத் தலைவருமான ராகுல் காந்தி வாஷிங்டனில் உள்ள நேஷனல் பிரஸ் க்ளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் ஜனநாயகம் உடைந்து விட்டது என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும். இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளானது. அது மிகவும் பலவீனமடைந்துள்ளது. தற்போது அது எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறது. அது திறம்பட போராடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார்.

இதனிடையே, பாகிஸ்தானால் ஆதரிக்கப்படுபவரும், இந்தியாவுக்கு எதிரானவருமான இல்ஹான் உமருக்கு ஆதரவாக ராகுல் காந்தி செயல்படுவதாக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாள்வியா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், காங்கிரஸ் வெளிப்படையாகவே இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி மீது அமித் ஷா சாடல்: “நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும், தேச விரோத கருத்துகளை வெளியிடுவதும் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வாடிக்கையாகிவிட்டது. நாட்டு நலனுக்கு எதிரான ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியை ஆதரிப்பது, வெளிநாட்டு மேடைகளில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பேசுவது என எப்போதும் ராகுல் காந்தி தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும், இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் செயல்படுகிறார்.” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

பன்னுன் ஆதரவு: வெர்ஜினியாவில் புலம் பெயர்ந்த இந்தியர்களுடன் ராகுல் காந்தி உரையாடும்போது, “இந்தியாவில் நடைபெற்றும் வரும் போர் என்பது சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவார்களா, மாட்டார்களா என்பது பற்றியதே” என்றார். இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்தியாவில் சீக்கியர்களின் நிலை குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு, அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வரும் காலிஸ்தான் பிரிவினைவாதி குருபத்வந்த் சிங் பன்னுன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவில் சீக்கியர்களுக்கு நிலவும் அச்சுறுத்தல் குறித்து ராகுல் காந்தி வெளிப்படையாக பேசியது துணிச்சல் மிக்க உரை மட்டுமல்ல, அது கடந்த 1947 முதல் இந்தியாவில் சீக்கியர்கள் எதிர்கொண்டு வரும் உண்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x