Published : 13 Sep 2024 05:52 AM
Last Updated : 13 Sep 2024 05:52 AM
திருமலை: திருப்பதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் வரும் அக்டோபர் 4-ம் தேதி தொடங்க உள்ளது. 12-ம்தேதி வரை நடைபெறும் இவ்விழாவின் முதல்நாளில் ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கஉள்ளார். அன்று இரவு முதல், வாகன சேவைகள் தொடங்குகின்றன.
பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளில் உற்சவரான மலையப்பர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அப்போது தினமும் 2 வாகனங்களில் சுவாமி உலா வருவார். இடையே தங்க தேர் ஊர்வலமும், தேர் திருவிழாவும் பிரம்மாண்டமாக நடத்தப்படும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்துவர். பிரம்மனே முன் நின்று நடத்துவதாக நம்பப்படுவதால் பிரம்மோற்சவ நாட்களில் வாகன சேவையின் முன் இன்றும் பிரம்ம ரதம் செல்வது ஐதீகம். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்காக போக்குவரத்து, தங்கும் இடம், இலவச உணவு, குடிநீர், பாதுகாப்பு போன்ற அடிப்படை வசதிகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.
வாகன சேவையின்போது காளை, குதிரை, யானை போன்ற பரிவட்டங்கள் முன்னால் செல்ல, அவர்களுக்கு பின் ஜீயர் சுவாமிகள் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பாடியபடி செல்வார்கள், இவர்களை தொடர்ந்து ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், புதுவை, கர்நாடகம், மகாராஷ்டிரா, அசாம், பிஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிஷா, குஜராத், மணிப்பூர், திரிபுரா, அருணாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த நடன கலைஞர்கள் நடனமாடியபடி செல்ல உள்ளனர். இந்த தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT