Published : 12 Sep 2024 05:25 PM
Last Updated : 12 Sep 2024 05:25 PM
புதுடெல்லி: உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல், மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுகிறது.
இது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) ஆகஸ்ட் 19-ம் தேதி நிமோனியா காய்ச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இன்று (செப்.12) பிற்பகல் 3.05 மணிக்கு உயிரிழந்தார். மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக அவரது உடலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கி உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் யெச்சூரி செயல்பட்டு வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அந்த பொறுப்பை கவனித்து வந்தார். அவரது மறைவுக்கு இந்திய அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1996-ல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கான பொதுவான குறைந்தபட்ச செயல் திட்டத்தைஉருவாக்குவதற்கு ப.சிதம்பரத்துடன் இணைந்து யெச்சூரி முக்கிய பங்களிப்பை வழங்கினார். 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை உருவாக்குவதிலும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். 1975-ல், ஜேஎன்யுவில் யெச்சூரி மாணவராக இருந்தபோது, அவசரநிலை காலத்தில் கைது செய்யப்பட்டார். 1977-78 இடையிலான ஓராண்டில் மூன்று முறை ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT