Published : 12 Sep 2024 02:54 PM
Last Updated : 12 Sep 2024 02:54 PM

ம.பி.யில் துணிகரம்: ராணுவ அதிகாரிகள் இருவரை தாக்கி உடன்வந்த தோழி பாலியல் வன்கொடுமை

இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் ராணுவ அதிகாரிகள் இருவர் தாக்கப்பட்டதோடு அவர்களுடன் வந்த இரண்டு பெண்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க் கிழமை அன்று மோவ் கன்டோன்மன்ட் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளம் ராணுவ அதிகாரிகள் தங்களது இரு தோழிகளுடன் வெளியே சென்றனர். அவர்கள் மோவ் - மண்டலேஸ்வர் பகுதியில் சுற்றுலா தலம் ஒன்றுக்குச் சென்றனர். அப்போது இருவர் மலை உச்சிக்கு செல்ல, இருவர் காரிலேயே இருந்தனர். புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில், அடையாளம் தெரியாத 6-7 பேர் அடங்கிய கும்பல் ஒன்று மோவ் - மண்டலேஸ்வர் சுற்றுலா தலத்தின் சாலை அருகே வந்து காரில் இருந்த ராணுவ அதிகாரி மற்றும் அவரது பெண் தோழியை சராமாரியாக தாக்கத் தொடங்கியது. அந்தச் சலசலப்பு சத்தம் கேட்டு மலை உச்சிக்குச் சென்றிருந்த மற்றொரு ராணுவ அதிகாரியும் தோழியும் தாக்குதல் நடந்த இடத்துக்கு வந்தனர்.

அப்போது காரில் இருந்த ராணுவ அதிகாரி மற்றும் அவரது தோழியைத் தாக்கிய கும்பல் அவர்களைத் துப்பாக்கி முனையில் பிணையக்கைதிகளாக வைத்துக் கொண்டு, மலையில் இருந்து இறங்கிவந்த அதிகாரியிடம் ரூ,10 லட்சம் கொண்டு வருமாறு எச்சரித்துள்ளது.

இதனிடையே இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட அந்த ராணுவ அதிகாரி, மோவ்வில் உள்ள தனது உயரதிகாரிக்கு தகவல் தெரிவித்து, போலீஸாருக்குக் தகவல் கொடுக்கச் செய்தார். இதனைத் தொடர்ந்து போலீஸ் குழுவொன்று அந்த பகுதிக்கு அனுப்பப்பட்டது. அதற்குள் தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்த தப்பிச் சென்றிருந்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான அந்த ராணுவ அதிகாரியும், அவரது தோழியும் மோவ் சிவில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துத் செல்லப்பட்டனர். அங்கு அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

ராணுவ அதிகாரி கொடுத்த புகாரின் பெயரில், தாக்குதல் நடத்தியவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 70 (கூட்டுப்பாலியல் வன்கொடுமை), 310- 2 (மோசடி), 308-2 (மிரட்டி பணம் பறித்தல்), 115-2 (காயத்தை ஏற்படுத்துதல்) மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

"இதுவரை ஆறு சந்தேகத்துக்குரிய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ரூபேஷ் திவேதி தெரிவித்துள்ளார். இந்தூர் காவல் கண்காணிப்பாளர் (ரூரல்) ஹிதிகா வசால் கூறுகையில், "நாங்கள் இரண்டு நபர்களை கைது செய்திருக்கிறோம். அவர்களில் ஒருவர் மீது 2016-ம் ஆண்டில் ஒரு கொள்ளை வழக்கு பதிவாகியுள்ளது.

இது நிரந்தரமாக கொள்ளையில் ஈடுபடும் குழு இல்லை. இரவில் அந்த இடத்தில் இளைஞர்கள் சிலர் கூடியிருப்பதை பார்த்து, அவர்களைத் தாக்க முடிவு செய்துள்ளனர். அந்தக் குழுவில் ஒருவரிடம் துப்பாக்கியும் இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x