Published : 12 Sep 2024 01:43 PM
Last Updated : 12 Sep 2024 01:43 PM

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இல்ல நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்: எதிர்க்கட்சிகள் கேள்வி

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டில் நடந்த ‘கணபதி பூஜையில்’ பிரதமர் மோடி கலந்து கொண்டிருப்பது நீதித்துறையின் வெளிப்படைத் தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது என்று சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி, புதுடெல்லியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட்டின் வீட்டில் நடந்த கணபதி பூஜையில் கலந்து கொண்டார். இதுகுறித்த வீடியோவில், பூஜையின் போது மகாராஷ்டிராவின் பாரம்பரியமான தொப்பியை பிரதமர் தலையில் அணிந்திருப்பதை காண முடிகிறது. மேலும், விநாயகர் சிலைக்கு அவர் ஆரத்தி காட்ட தலைமை நீதிபதி, அவரது மனைவி உட்பட்டவர்கள் பூஜையில் பங்கேற்கின்றனர். பிரதமரின் இந்த வருகை குறித்து சிவசேனா உத்தவ் பால் தாக்கரே பிரிவைச் சேர்ந்த சஞ்சய் ரவுத், “அரசியலமைப்பு அதிகாரிகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் இடையிலான இத்தகைய உரையாடல் நீதித்துறையின் நம்பிக்கையை குறைமதிப்புக்கு உள்ளாக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ரவுத் கூறியதாவது: பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வீட்டு ‘கணபதி பூஜையில் கலந்து கொண்டுள்ளார். அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்கள், அரசியல்வாதிகளை இந்தவகையில் சந்திப்பது பல்வேறு சந்தேகத்தை எழுப்பும் என்பதே எங்களின் கவலை. மகாராஷ்டிராவின் தற்போதைய அரசு குறித்த எங்களின் வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் முன்பு விசாரணைக்கு வர இருக்கிறது. பிரதமர் மோடியும் அதில் ஒரு பகுதியாக இருக்கிறார். இப்போது எங்களுக்கு நீதிகிடைக்குமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது. அந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்வது பற்றி தலைமை நீதிபதி பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு ரவுத் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினர், பிரியங்கா சதுர்வேதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சரி, இந்த விழாக்கள் முடிந்ததும், மகாராஷ்டிரா வழக்குகள், அரசியலமைப்பு பிரிவு 10-ன் அப்பட்டமான புறக்கணிப்பு குறித்த விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுத்தமானவராக இருப்பார் சுதந்திரமாக செயல்படுவார் என்று கருதுகிறேன். கொஞ்சம் பொறுங்கள், தேர்தல் அறிவிப்பு தொலைவில் இல்லை. அதனால் அந்த வழக்குகள் வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்படலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், பிரதமர் மோடியை தனது இல்லத்தில் தனிப்பட்ட முறையில் சந்திக்க அனுமதித்தது அதிர்ச்சியை அளிக்கிறது. நிர்வாகத்திடமிருந்து குடிமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் மற்றும் அரசியலமைப்பின் வரம்புக்குள் அரசு செயல்படுவதை உறுதி செய்யும் பொறுப்பில் உள்ள நீதித்துறைக்கு இது மிகவும் மோசமான சமிக்ஞையை அனுப்புகிறது. அதனால் தான் நிர்வாகத்துறைக்கும், நீதித்துறைக்கும் இரு கைகள் எட்டும் தூரம் இடைவெளி இருக்க வேண்டும்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞரும் சமூக செயல்பாட்டாளருமான இந்திரா ஜெய் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிடுள்ள பதிவில், “நிர்வாகத்துக்கும், நீதித்துறைக்கும் இடையிலான அதிகாரங்களைப் பிரிப்பதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சமரசம் செய்துள்ளார். தலைமை நீதிபதியின் சுதந்திரத்தின் மீது இருந்த நம்பிக்கை அனைத்தும் போய்விட்டது. நிர்வாகத்திடம் இருந்து தலைமை நீதிபதியின் சுதந்திரத்தின் சமரசம் குறித்து வெளிப்படையாக காட்டப்பட்ட இந்த விஷயம் குறித்து உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (SCBA) கண்டிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x