Published : 12 Sep 2024 04:03 AM
Last Updated : 12 Sep 2024 04:03 AM

செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் பல்வேறு நிறுவனங்கள் ஆர்வம்: செமிகான் மாநாட்டில் பிரதமர் மோடி தகவல்

கிரேட்டர் நொய்டாவில் ‘செமிகான் இந்தியா 2024' மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்து, செமிகண்டக்டர் கண்காட்சியை பார்வையிட்டார். உடன், மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர். படம்: பிடிஐ

புதுடெல்லி: செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு செய்ய பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் ‘செமிகான் 2024’ என்ற 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. இதில், இந்தியாவை உலகளாவிய செமிகண்டக்டர் மையமாக மாற்றுவதற்கான கொள்கை மற்றும் உத்திகள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது. மேலும், இத்துறை சார்ந்த கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள், நிபுணர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடங்கி வைத்த பிறகு, பிரதமர் மோடி பேசிய தாவது:

ஸ்மார்ட்போன்கள் முதல் மின் வாகனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வரை சிப்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த சூழ்நிலையில், விநியோக சங்கிலியில் பின்னடைவு ஏற்படுவது என்பது மிகவும் முக்கிய பிரச்சினை. கரோனா பெருந்தொற்று காலத்தில் இதை கண்கூடாக பார்த்தோம். உலக நாடுகள் மின்னணு சாதனங்களுக்கு தேவையான சிப்களுக்கு சீனாவை அதிக அளவில் நம்பியிருந்த நிலையில், கரோனாவை கட்டுப்படுத்த அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், சிப் இறக்குமதிக்காக சீனாவை நம்பியிருந்த உலக நாடுகளின் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்தியாவின் செமிகண்டக்டர் துறை உள் நாட்டின் சவால்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய சவால்களுக்கும் ஒரு தீர்வாகும். இந்தியாவின் செமிகண்டக்டர் துறை புரட்சியின் முகட்டில் உள்ளது. இது குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுடன் தொழில் துறையை மாற்றி அமைக்கும். செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தியில் நாட்டின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தொழில்நுட்ப வல்லுநர்கள், பொறியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர் அண்ட் டி) நிபுணர்கள் என 85 ஆயிரம் பணியாளர்களை இந்தியா உருவாக்கி வருகிறது.

உயர் தொழில்நுட்ப மற்றும் அடுத்த தலைமுறை சிப்களை உருவாக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம். இதற்காக, ஐஐடிகளுடன் இணைந்து இந்திய விண்வெளி அறிவியல் நிறுவனத்தில் (ஐஐஎஸ்சி) செமிகண்டக்டர் ஆராய்ச்சி மையத்தை நிறுவ மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு சாதனத்திலும் இந்தியாவில் தயாரான சிப் இருக்க வேண்டும் என்பது எங்களது கனவு. இந்தியாவை செமிகண்டக்டர் மையமாக மாற்ற தேவையான அனைத்து வசதிகளையும் செய்துதர அரசு தயாராக உள்ளது.

செமிகண்டக்டர் உற்பத்தி துறையில் ஏற்கெனவே ரூ.1.50 லட்சம் கோடி முதலீடு செய்ய பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. மேலும் பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எனவே, இத்துறையில் முதலீடு செய்ய உலக நாடுகள் முன்வர வேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார் சமீபத்தில் கூறும்போது, “இஸ்ரேலை சேர்ந்த தனியார் நிறுவனம் இந்தியாவில் செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும் டெல் அவிவ் நகரில் புதிய மெட்ரோ ரயில் சேவை உட்பட 35 பில்லியன் டாலர் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவின் உள்கட்டமைப்பு நிறு வனத்தின் உதவியை நாடி உள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x