Published : 12 Sep 2024 04:22 AM
Last Updated : 12 Sep 2024 04:22 AM

முதல்வர் மம்தா முன்னிலையில் பேச்சு நடத்த வேண்டும்: நேரடி ஒளிபரப்பு செய்யுமாறு கொல்கத்தா மருத்துவர்கள் நிபந்தனை

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். இதை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். இதனால், பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தை கண்டித்து, கடந்த 33 நாட்களாக அந்த மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனையிலும், மாநில சுகாதாரத் துறையிலும் பல்வேறு முறைகேடுகள் நடந் திருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஆர்.ஜி. கர் மருத் துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் கைது செய்யப்பட்டார். இதுதவிர மாநில சுகாதாரத் துறை செயலர் நாராயண் ஸ்வரூப் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் சிலரை பதவி நீக்கம் செய்யும்படி மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

உச்ச நீதிமன்றம் கெடு: இதற்கிடையே, மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர். மேற்கு வங்கத்தின் சுகாதார அமைப்பில் கடுமையான இடையூறு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், செப். 10-ம் தேதி மாலை 5 மணிக்குள் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கெடு விதித்தது. ஆனால், குற்றவாளிக்கு கடுமை யான தண்டனை விதிப்பது, மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்வது, சுகாதாரத் துறை செயலர் நாராயண் ஸ்வரூப் நிகாம் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வது உள்ளிட்ட தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட முடியாது என்று மருத்துவர்கள் திட்ட வட்டமாக தெரிவித்துவிட்டனர். இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்க சுகாதார துறை செயலர் நாராயண் ஸ்வரூப் நிகாம் நேற்று முன்தினம் மாலை அழைப்பு விடுத்தார். இந்த கோரிக்கையையும் மருத்துவர்கள் நிராகரித்தனர்.

அரசு அழைப்பு: இந்நிலையில், பேச்சுவார்த் தைக்கு வருமாறு மாநில தலைமைச் செயலர் மனோஜ் பந்த், போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு நேற்று காலையில் மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்தார். மாலை 6 மணிக்கு நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு 12 முதல் 15 மருத்துவர்கள் குழுவை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், மருத்துவர்கள் அளித்த பதிலில், “குறைந்தபட்சம் 30 பிரதிநிதிகள் அடங்கிய குழுவை சந்திக்க அனுமதிக்க வேண்டும். முதல்வர் மம்தா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய, இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். பெண் மருத்துவர் கொலையில் தொடர்புடைய மற்றும் ஆதாரங்களை அழித்த அனைவரையும் தண்டிக்க வேண்டும். மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொல்கத்தா காவல் ஆணையர் வினீத் கோயல் மற்றும் சுகாதார துறை செயலர் நாராயண் ஸ்வரூப் நிகாம் உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும்’ என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலர் மனோஜ் பந்த் நேற்று கூறும்போது, ‘‘போராடும் மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந் தோம். ஆனால் அவர்களுடைய பதில் திருப்திகரமாக இல்லை" என்றார். இதனால், பேச்சுவார்த்தை நடைபெறுமா என்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x