Published : 12 Sep 2024 06:13 AM
Last Updated : 12 Sep 2024 06:13 AM

ஆந்திராவில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களை புல்டோசர் மூலம் அழிக்க விடாமல் பாட்டில்களை அள்ளிய பொதுமக்கள்: வீடியோ வைரல்

போலீஸாரை மீறி மதுபாட்டில்களை அள்ளிச் செல்லும் பொதுமக்கள்.

குண்டூர்: பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை சாலையில் கொட்டி, புல்டோசர் மூலம் அழிக்க முயன்றபோது பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, பாட்டில்களை அள்ளிச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது ஆந்திராவில் வைரல் ஆகி வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த மே மாதம் சட்டப்பேரவை, மக்களவைக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் சட்டவிரோதமாக கொண்டு சென்ற மதுபான பாட்டில்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று, சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட மதுபானபாட்டில்களையும் கலால் துறையினர் பறிமுதல் செய்திருந்தனர். இவைகளை நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சாலையில் கொட்டி அழிப்பது என கலால் துறை அதிகாரிகள் தீர்மானித்தனர். அதன்படி, குண்டூரில் ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 24,000 மதுபான பாட்டில்களை குப்பை மேட்டு பகுதியில் உள்ள சாலையில் கொட்டி, புல்டோசர் மூலம் அழிப்பது எனஎஸ்பி. சதீஷ்குமார் முடிவு செய்தார்.

அதன்படி, பல்வேறு மதுபான பாட்டில்களை போலீஸார் சாலையில் வரிசையாக அடுக்கினர். அப்போது அங்கு தயாராகஇருந்த புல்டோசரைக் கொண்டு அந்த பாட்டில்கள் மீது ஏற்றிநொறுக்கிக் கொண்ட வந்தனர். இந்த சம்பவத்தைப் பார்க்க அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிக அளவில் கூடினர். அப்போது, கூட்டத்தில் இருந்தவர்களில் சிலரால், ‘எங்களது கண் முன் இப்படி மது பாட்டில்களை அழிக்கிறார்களே’ என பதறினர். உடனே, அங்கு பாதுகாப்புக்கு போலீஸார் நிற்கிறார்கள் என்பதை கூட மறந்து, அவர்களை தள்ளி விட்டு விட்டு, மீதமிருந்த மது பாட்டில்களை இரு கைகளிலும் அள்ளி கொண்டு ஓடினர். இவர்களை போலீஸார் தடுக்க முயன்றும் முடியவில்லை. 30 சதவீத பாட்டில்களை பொதுமக்கள் அள்ளி சென்று விட்டனர். இதையடுத்து இதுபோன்று மீண்டும் நடக்காதவண்ணம் வேறுஎங்காவது பொதுமக்களின் நடமாட்டம் இல்லாத இடத்தில் பாட்டில்களை அழிக்க வேண்டுமென எஸ்.பி. சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ஆந்திர மாநிலத்தில் வைரல் ஆகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x