Published : 11 Sep 2024 01:41 PM
Last Updated : 11 Sep 2024 01:41 PM

“தேசத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமாக செயல்படுகிறார் ராகுல் காந்தி” - அமித் ஷா குற்றச்சாட்டு

புது டெல்லி: “ராகுல் காந்தி எப்போதும் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும், இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் செயல்படுகிறார்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “நாட்டை பிளவுபடுத்த சதி செய்யும் சக்திகளுடன் நிற்பதும், தேச விரோத கருத்துகளை வெளியிடுவதும் ராகுல் காந்திக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் வாடிக்கையாகிவிட்டது. நாட்டு நலனுக்கு எதிரான ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியை ஆதரிப்பது, வெளிநாட்டு மேடைகளில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பேசுவது என எப்போதும் ராகுல் காந்தி தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகவும், இந்தியர்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும் செயல்படுகிறார்.

மதம், மொழி வேறுபாடுகளின் அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தும் காங்கிரஸின் அரசியலை ராகுல் காந்தியின் பேச்சு அம்பலப்படுத்தியுள்ளது. நாட்டில் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான முகத்தை மீண்டும் ஒருமுறை முன்னிலைப்படுத்தியுள்ளார். அவர் மனதில் இருந்த எண்ணங்கள் கடைசியில் வார்த்தைகளாக வெளியேறிவிட்டன. பாஜக இருக்கும் வரை யாராலும் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவோ, தேசத்தின் பாதுகாப்பில் குழப்பம் ஏற்படுத்தவோ முடியாது என்பதை ராகுல் காந்திக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இட ஒதுக்கீட்டுக்கு எதிராக பேசினாரா ராகுல்?: அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி அங்குள்ள ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது “இந்தியாவில் இட ஒதுக்கீடு எவ்வளவு காலம் தொடரும்” என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்தியா அனைத்து தரப்பினருக்குமான ஒரு நியாயமான இடத்தை அடையும்போது, இட ஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து சிந்திப்போம். ஆனால், தற்போது இந்தியா அந்த இடத்தை அடையவில்லை” என பேசியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x