Published : 11 Sep 2024 07:17 AM
Last Updated : 11 Sep 2024 07:17 AM
புதுடெல்லி: வக்பு சட்டத் திருத்த மசோதா விவகாரத்தில் முஸ்லிம்களை தவறாக வழி நடத்துகிறார் மதபோதகர் ஜாகிர் நாயக் என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மருத்துவம் படித்துள்ள ஜாகிர் நாயக், முஸ்லிம் மத பிரச்சாரத்தையும் செய்து வருகிறார். இவரது சர்ச்சையான போதனைகளால் இந்தியா, வங்கதேசம், கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இவரது மத போதனைகள், சொற்பொழிவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இவர் பீஸ் டி.வி. என்ற தொலைக்காட்சியை நடத்தி வருகிறார்.
இதனிடையே கடந்த மாதம் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக மத போதகர் ஜாகிர் நாயக்சில கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்திருந்தார். இந்த மசோதாவால், வக்பு வாரியச் சொத்துகள் பறிபோக வாய்ப்புள்ளது.
எனவே, இந்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும் என்றும், அதற்காக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு தங்களது ஆட்சேபத்தை 5 லட்சம் முஸ்லிம்கள் தெரிவிக்கவேண்டும் என்று ஜாகிர் நாயக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து நேற்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: வக்பு சட்டத் திருத்த மசோதா குறித்து தவறான கருத்துகளை தெரிவித்து முஸ்லிம்களை திசை திருப்பி வருகிறார் ஜாகிர் நாயக். இவரது பேச்சால், வெளிநாடுகளில் வாழும் இந்திய முஸ்லிம்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது கருத்துகளுக்கு நான் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். வக்பு சட்டத்திருத்த மசோதாவால் முஸ்லிம்களுக்கு எந்தப் பிரச்சினையையும் மத்திய அரசு ஏற்படுத்தாது.
எனவே, வெளிநாடுகளில் வசிக்கும் அப்பாவி முஸ்லிம்களை, மத போதகர் ஜாகிர் நாயக் தவறாக வழிநடத்தக்கூடாது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. நம் நாட்டில் வசிக்கும் அனைவருக்கும் தங்களது கருத்துகளை தெரிவிக்க உரிமை உண்டு. தவறான பிரச்சாரத்தால் தவறான கருத்துகள் ஏற்பட வழிவகுக்கும். இவ்வாறு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT