Published : 10 Sep 2024 08:35 PM
Last Updated : 10 Sep 2024 08:35 PM

ஹரியானா தேர்தல்: வினேஷ் போகத்தை எதிர்த்து பாஜகவில் யோகேஷ் பைராகி போட்டி

யோகேஷ் பைராகி (இடது) | வினேஷ் போகத் (வலது)

சண்டிகர்: ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் இரண்டாவது பட்டியிலை பாஜக இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டது. அங்குள்ள ஜூலானாவில் காங்கிரஸ் வேட்பாளரான வினேஷ் போகத்தை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் ஏர் இந்தியா விமானி கேப்டன் யோகேஷ் பைராகி போட்டியிடுகிறார்.

பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங், ஹரியாணா பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அதன்படி, மாநில முதல்வர் நயாப் சிங் சைனி லட்வா தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சர்களான கிருஷ்ண குமார் பேடி மற்றும் மணீஷ் குரோவர் முறையே நர்வானா மற்றும் ரோக்தக் தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இந்தப் பட்டியலில் குறிப்பிடத்தகுந்த விஷயமாக, மாநிலத்தின் ஜூலானா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வினேஷ் போகத்துக்கு எதிராக கேப்டன் யோகேஷ் பைராகியை பாஜக களமிறக்குகிறது.

விமான பைலட் டூ பாஜக வேட்பாளர்: ஜூலானா தொகுதி பாஜக வேட்பாளரான 35 வயதாகும் யோகேஷ் பைராகி ஏர் இந்தியாவின் முன்னாள் பைலட் ஆவார். இவர், சென்னை வெள்ளம், கரோனா காலகட்டத்தில் வெளிநாடுகளில் வாழ்ந்த இந்தியர்களை தாய் நாடு அழைத்து வந்த இந்தியா அரசின் முயற்சியான ‘வந்தே பாரத்’ திட்டம் போன்ற சிக்கலான காலக்கட்டங்களில் அரசுடன் இணைந்து முக்கிய பங்காற்றியுள்ளார். அதற்காகவே மக்கள் மத்தியில் மிகவும் அறியப்படுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி மீதான அபிமானம், குறிப்பாக வந்தே பாரத் திட்டத்தின் வெற்றி போன்றவைகளால் யோகேஷ் பாஜகவில் இணைந்தார். ஹரியாணாவின் ஜிந்த் மாவட்டத்தின் சஃபிடனில் வசித்து வந்த யோகேஷ், தற்போது மாநில பாஜக இளைஞர் அணியின் துணைத் தலைவராக உள்ளார்.

யோகேஷ் போட்டியிட இருக்கும் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் போட்டியிடுகிறார். இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் அண்மையில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நிலையில் 100 கிராம் கூடுதல் எடை இருந்ததாகக் கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன்பின் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். பாரிஸிலிருந்து இந்தியா திரும்பியதும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக நின்றார்.

முன்னதாக, கடந்த ஆண்டில் இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் தொல்லை புகார் அளித்தவர் வினேஷ் போகத். இவருக்கு உறுதுணையாக பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் நின்று போராட்டத்தை நடத்தினர். இருவருமே ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தநிலையில், விளையாட்டு வீரர்கள் இருவரும் செப்.7-ம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர் இதனைத் தொடர்ந்து வினேஷ் போகத் ஜூலானா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்.5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் அக்.8ம் தேதி எண்ணப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x