Published : 10 Sep 2024 05:08 PM
Last Updated : 10 Sep 2024 05:08 PM

“இனி எனது வீட்டில் துர்கா பூஜையே கிடையாது” - மம்தாவுக்கு எதிராக கொல்கத்தா மாணவியின் தாய் ஆவேசம்

துர்கா பூஜை கமிட்டியைச் சேர்ந்தவர்கள், உயிரிழந்த பயிற்சி மருத்துவருக்கு நீதி கேட்டு செப்.7-ல் நடத்திய போராட்டம்.

கொல்கத்தா: இனி தனது வீட்டில் துர்கா பூஜை கொண்டாடப்பட மாட்டாது என கொல்கத்தா ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த பயிற்சி மருத்துவரின் தாய் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

துர்கா பூஜை நெருங்கி வருவதால் திருவிழாக்களுக்குத் திரும்புமாறு மேற்கு வங்க மக்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்திருந்தார். மம்தா பானர்ஜியின் இந்த அழைப்பை உயிரிழந்த பயிற்சி மருத்துவரின் தாய் நிராகரித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “துர்கா பூஜை என் வீட்டிலும் வழக்கமாக கொண்டாடப்படும். என் மகளே அதற்கான அனைத்து வேலைகளையும் பார்ப்பாள். ஆனால், துர்கா பூஜை இனி என் வீட்டில் கொண்டாடப்படாது. என் வீட்டில் விளக்கு அணைந்துவிட்டது. திருவிழாவுக்குத் திரும்பும்படி மக்களை நான் எப்படிக் கேட்பது?

முதல்வரின் குடும்பத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் இதை அவர் கூறியிருப்பாரா? நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடருவோம்" என்று தெரிவித்துள்ளார். தனது மகள் இறந்த பிறகு, மேற்கு வங்க அரசு தனக்கு பணம் வழங்க முன்வந்ததாக அவர் தெரிவித்திருந்தார். இதற்கு நேற்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, மாநில அரசு அவ்வாறு முயலவில்லை என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள உயிரிழந்த பயிற்சி மருத்துவரின் தாய், “முதல்வர் பொய் சொல்கிறார். என் மகள் திரும்பி வரமாட்டாள். அவள் பெயரில் நான் பொய் சொல்லலாமா? எங்களுக்கு பணம் வழங்கப்படும் என்று கூறிய முதல்வர், எங்கள் மகளின் நினைவாக ஏதாவது ஒன்றை உருவாக்குமாறு பரிந்துரைத்தார். அதற்கு நான், எனது மகளுக்கு நீதி கிடைத்ததும் பணத்தைப் பெற்றுக்கொள்ள அவரது அலுவலகத்திற்கு வருவதாக பதிலளித்தேன்” என கூறினார்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டாம் ஆண்டு முதுகலை பயின்று வந்த மருத்துவ மாணவி, கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி மருத்துவமனையின் கருத்தரங்கு மண்டபத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அங்கு தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாகவும், பயிற்சி மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கவும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x