Published : 10 Sep 2024 04:32 PM
Last Updated : 10 Sep 2024 04:32 PM
புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது தான் மேற்கொண்ட காஷ்மீர் பயணம் தனக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாக சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரான சுஷில்குமார் ஷிண்டே, ‘அரசியலில் ஐந்து தசாப்தங்கள்’ என்ற தனது நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றினார். அப்போது அவர், "கல்வியாளர் விஜய் தாரிடம் நான் ஆலோசனை கேட்பது வழக்கம். நான் உள்துறை அமைச்சராக ஆவதற்கு முன்பு, அவரை சந்தித்தேன். அவர் என்னிடம், 'உள்துறை அமைச்சரானதும் சுற்றித் திரியாமல், ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும். அங்குள்ள தால் ஏரியைச் சுற்றிப் பார்க்க வேண்டும்' என்று எனக்கு அறிவுறுத்தினார்.
அந்த அறிவுரை எனக்கு விளம்பரத்தைக் கொடுத்தது. மக்கள் நினைத்தார்கள், இங்கே ஒரு உள்துறை அமைச்சர் எந்த பயமும் இல்லாமல் அங்கு செல்கிறார் என்று. ஆனால் நான் பயந்துவிட்டேன் என்று யாரிடம் சொல்வது? (நிகழ்ச்சி பங்கேற்பாளர்கள் சிரிக்கிறார்கள்). உங்களை சிரிக்க வைப்பதற்காகத்தான் இதைச் சொன்னேன். ஆனால், ஒரு முன்னாள் போலீஸ்காரரால் இப்படிப் பேச முடியாது” என்று தெரிவித்தார்.
ப. சிதம்பரத்துக்குப் பிறகு கடந்த 2012-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கால் இந்தியாவின் உள்துறை அமைச்சராக ஷிண்டே நியமிக்கப்பட்டார். இதையடுத்து அதே ஆண்டு அவர் ஸ்ரீநகரின் லால் சௌக்கில் ஷாப்பிங் செய்தார். அப்போது முதல்வர் உமர் அப்துல்லாவும் ஷிண்டே உடன் சென்றார். ஷிண்டே தனது இந்த பயணத்தின் போது ஸ்ரீநகரில் உள்ள கடிகார கோபுரத்தை பார்வையிட்டார். 2008 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் போராட்டங்கள் வெடித்தபோது, இந்த கோபுரத்தின் மீது பாகிஸ்தான் கொடி அவ்வப்போது ஏற்றப்பட்டன.
சுஷில்குமார் ஷிண்டேவின் இந்த கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தின் உள்துறை அமைச்சர் சுஷில் ஷிண்டே, ஜம்மு காஷ்மீர் செல்ல பயந்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், இந்திய ஒற்றுமை யாத்திரையின்போது ராகுல் காந்தி காஷ்மீரில் பனி விளையாட்டை சவுகரியமாக விளையாடினார். தேசிய மாநாட்டுக் கட்சியும், காங்கிரஸும் தற்போது மீண்டும் பயங்கரவாத நாட்களுக்கு கொண்டு செல்ல விரும்புகின்றன!" என விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...