Published : 10 Sep 2024 01:12 PM
Last Updated : 10 Sep 2024 01:12 PM

“இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் சக்திகளால் வெற்றிபெற முடியாது” - மோகன் பாகவத்

புனே: இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சில சக்திகள், அதன் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளன என்று தெரிவித்துள்ள ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத், ஆனால் அந்த சக்திகளால் வெற்றிபெற முடியாது என அவர் குறிப்பிட்டார்.

டாக்டர் மிலிந்த் பரத்கர் எழுதிய தஞ்சாவர்ச்சே மராத்தே' என்ற நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “கடந்த காலங்களில் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்த படையெடுப்புகள், பெரும்பாலும் காணக்கூடியதாக இருந்தன. எனவே, மக்கள் விழிப்புடன் இருந்தார்கள். இப்போது அவை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன.

ராமாயணத்தில் தாடகை நேரடியாக வந்து தாக்கினாள். ஒரு அம்பு (ராமர் மற்றும் லக்ஷ்மணனால்) மூலம் அவள் கொல்லப்பட்டாள். ஆனால், கிருஷ்ணாவதாரத்தில் பூதகி, மாறு வேடத்தில் வந்து கிருஷ்ணரை கொல்ல முயன்றாள். பின்னர், கிருஷ்ணராலேயே அவள் கொல்லப்பட்டாள்.

நாட்டில் இன்றைய நிலையும் அப்படித்தான் இருக்கிறது. நாட்டுக்கு எதிராக தாக்குதல்கள் நடைபெறுகின்றன. பொருளாதாரம், ஆன்மீகம், அரசியல் என எல்லாவற்றிலும் அவை பேரழிவை ஏற்படுத்துகின்றன.

சில சக்திகள், இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் தடைகளை உருவாக்குகின்றன. உலக அரங்கில் இந்தியாவின் எழுச்சியைக் கண்டு அவை அஞ்சுகின்றன. இந்தியா பெரியதாக வளர்ந்தால், தங்கள் வணிகங்கள் மூடப்பட்டுவிடும் என்று அஞ்சுபவர்கள், அத்தகைய சக்திகள், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் இடையூறுகளை உருவாக்குகின்றன. அவை, தங்களிடம் உள்ள அனைத்து சக்திகளையும் ஊக்குவிப்பதன் மூலம் செயல்படுகின்றன. அவர்கள், கண்களுக்கு புலப்படும் வகையிலோ, புலப்படாத வகையிலோ தாக்குதல்களை நடத்துகிறார்கள். ஆனால், அவர்களால் வெற்றிபெற முடியாது.

சத்ரபதி சிவாஜி மகாராஜின் காலத்தில் இந்தியாவின் எழுச்சிக்கான நம்பிக்கை இல்லாத நிலை இருந்தது. அதேபோன்ற நிலை தற்போதும் நிலவுவதால் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சத்ரபதி சிவாஜி மகாராஜின் காலத்தில் தர்மம் மற்றும் நீதியின் சக்தியைப் பயன்படுத்தி சமாளிக்கப்பட்டது.

இந்தியாவை வரையறுக்கக்கூடியதாக ‘ஜீவனி சக்தி’ என்ற ஒரு காரணி உள்ளது. ஜீவனி சக்தி நமது தேசத்தின் அடிப்படை. அது எப்போதும் இருக்கும் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. 'சிருஷ்டி' தொடங்கும்போது தர்மம் இருந்தது. இறுதி வரை அது தேவைப்படும்.

இந்தியா மிகவும் அதிர்ஷ்டமான மற்றும் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு. பெரும் ஆளுமைகள் மற்றும் மகான்களின் ஆசீர்வாதங்களாலும், உத்வேகத்தாலும், நாடு அழியாத நாடாக மாறியது. இதன் காரணமாக, நம் நாடு, அங்கும் இங்கும் சிறிது சிறிதாக அலைந்து திரிந்தாலும், இறுதியில் அது தனது பாதைக்கு வந்துவிடும். இது நாம் பெற்ற தெய்வீக வரம். இது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெறப்பட்டது. ஏனெனில் கடவுள் உலகின் பொறுப்புகளை நம்மிடம் ஒப்படைத்துள்ளார்.

பிற நாடுகள் பிழைப்பிற்காக தோன்றின. ஆனால், இந்தியாவின் உருவாக்கம் "வசுதைவ குடும்பகம்" என்ற கருத்தை நிரூபிப்பதற்காக தோன்றியது. ஒற்றுமையின் மையத்தில் தர்மம் உள்ளது. இந்த ஒற்றுமையின் நூல், தர்மத்திலிருந்து உருவானது. ​​தர்மம் என்றால் இதை உண்ணாதே, அதைச் சாப்பிடாதே, அதை தொடாதே என்பதல்ல. தர்மம் என்றால் உண்மை, கருணை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பரந்த கருத்து.

புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரரும், தேசியவாதியுமான சுபாஷ் சந்திர போஸ் எழுதிய புத்தகத்தில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவை எப்படிப் பார்த்தார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய ‘இந்தியன் ரெசிஸ்டன்ஸ்’ என்ற புத்தகத்தை சமீபத்தில் பார்த்தேன். தங்களால்தான் இந்தியா ஒரு நாடாக உருவெடுத்தது; இல்லாவிட்டால் அது பல நாடுகளின் தொகுப்பாக இருந்திருக்கும் என்று ஆங்கிலேயர்கள் கருதுகிறார்கள் என்பதை அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கிலேயர்களின் இந்த எண்ணம் தவறானது என்றும் அவர் கூறியுள்ளார். இந்து தர்மத்தின் காரணமாகவே இந்தியா (பாரதவர்ஷம்) ஒன்றுபட்டுள்ளது என்று போஸ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். போஸ் தன்னை இடதுசாரி என்று புத்தகத்தில் சொல்லிக்கொண்டார். காங்கிரஸில் இடதுசாரி குழு இருந்தது. இடதுசாரிகள் என்று பெயரிடப்பட்ட மற்றவர்கள் யார் என்று பார்த்தால், அவர்கள் லோகமான்ய திலகர், அரவிந்த் கோஷ் உள்ளிட்டோரைச் சொல்ல முடியும். இடதுசாரிகள் என்றால் சமூகத்தில் முக்கிய மாற்றங்களை விரும்புபவர்கள்; முழுமையான சுதந்திரத்தை விரும்புபவர்கள். எங்கள் பிராந்தியத்தில், நாங்கள் அவர்களை 'ஜஹல்' (தீவிரமானவர்கள்) என்று அழைக்கிறோம்.

இந்து என்பது பெயர் அல்ல. இது அனைத்து வேறுபாடுகளையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு பெயரடை. அதனால்தான் சத்ரபதி சிவாஜி காலத்தில் மராட்டியர்கள் இன்றைய தமிழ்நாடு (தஞ்சாவூர்) சென்றபோது, அவர்கள் வெளியாட்களாக நடத்தப்படவில்லை. அவர்களின் பணி மற்றும் நடத்தை காரணமாக அவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.

முகலாயர்களுக்கு எதிரான போராட்டம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நடந்துள்ளது. முகலாயர்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்களின் ஆட்சி ஏற்படாமல் இருந்திருந்தால், அனைத்து வேறுபாடுகளையும் மீறி நாடு இன்னும் ஒற்றுமையாக இருந்திருக்கும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x