Published : 10 Sep 2024 10:05 AM
Last Updated : 10 Sep 2024 10:05 AM

இந்தியாவில் இடஒதுக்கீடு ரத்து பற்றி யோசிக்கும் காலம் எது? - அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

ஜார்ஜ்டவுன்: “இந்தியா அனைத்து தரப்பினருக்கும் நியாயமான இடமாக மாறும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும். இப்போது இந்தியா நியாயமான இடமாக இல்லை.” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தியிடம், “இந்தியாவில் இடஒதுக்கீடு இன்னும் எத்தனை காலம் நீடிக்கும்?” என்ற எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறாக பதிலளித்துள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா சென்றடைந்தார். பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடினார்.

அப்போது ராகுல் கூறியதாவது: நிதி எண்களைப் பார்க்கும் போது, ​​பழங்குடியினருக்கு 100 ரூபாயில் 10 பைசா கிடைக்கும்; தலித்துகள் 100 ரூபாயில் 5 ரூபாய் பெறுகிறார்கள், அதே எண்ணிக்கையில் தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் பெறுகிறார்கள். இது சமத்துவமற்ற நிலைக்கு ஒரு சாட்சி.

இந்தியாவின் பெரிய தொழில் ஜாம்பவான்கள் பட்டியலைக் கவனித்தால் சில விஷயங்கள் உங்களுக்குப் புரியும். நான் அதனை ஆய்வு செய்துள்ளேன். அதன்படி 90% இந்தியர்கள் தொழில்துறையில் பெரிதாக பங்களிப்பு செய்ய இயலவில்லை என்பதை நான் புரிந்து கொண்டேன். அதற்கு உதாரணமாக, இந்தியாவின் டாப் 200 தொழில் ஜாம்பவான்கள் பட்டியலைச் சொல்லலாம். அதில் எனக்கு ஒரு பட்டியலின, பழங்குடியினப் பெயரைக் காண்பியுங்கள். எனக்குத் தெரிந்து ஒரே ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் அந்தப் பட்டியலில் இருக்கிறார். ஆனால் இந்தியாவில் 50 சதவீதம் மக்கள் ஓபிசி வகுப்பினர். அப்படியிருக்க நாம் நிலவும் பிரச்சினைக்கு சரியாக கவனம் செலுத்தவில்லை என்பதே உண்மை. பிரச்சினையும் அதுதான். அதற்கு இப்போதிருக்கும் தீர்வுகளில் ஒன்று இடஒதுக்கீடு. ஆகையால், இந்தியா நியாயமான இடமாக மாறும்போது இடஒதுக்கீட்டை ரத்து செய்வது குறித்து காங்கிரஸ் கட்சி யோசிக்கும். இப்போது இந்தியா நியாயமான இடமாக இல்லை.

உயர் சாதி வகுப்பினர் பலரும், ‘நாங்கள் என்ன தவறு செய்துவிட்டோம்?’ என்ற கேள்வியோடு வரலாம். ‘நாங்கள் ஏன் தண்டிக்கப்படுகிறோம்?’ எனக் கேட்கலாம். அப்போது அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது பற்றி நீங்களும் யோசிக்கலாம். ஆனால், நீங்கள் எவரும் அதானியாக, அம்பானியாக உருவாக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்றால் உங்களுக்கான கதவுகள் மூடப்பட்டிருக்கிறது. பொதுப் பிரிவில் இருந்து கொண்டு கேள்வி கேட்போருக்கான விடை ’கதவைத் திறந்துவிடுங்கள்’ என்பதே. இவ்வாறு ராகுல் கூறினார்.

பொது சிவில் சட்டம் குறித்த கேள்விக்கு, “பாஜகவின் திட்டத்தைத் தெரிந்த கொண்ட பின்னர் தன் இது பற்றி நான் பேச இயலும். பாஜக தான் பொது சிவில் சட்டம் பற்றி பேசுகிறது. நாங்கள் இன்னும் அதனைப் பார்க்கவில்லை. அவர்கள் எதைப் பற்றி பேசுகிறார்கள் என்றும் தெரியவில்லை. அவர்கள் அதனை அம்பலப்படுத்தட்டும். நாங்கள் பின்னர் அதன் மீதான கருத்தைச் சொல்கிறோம்.” என்றார்.

இண்டியா கூட்டணியின் ஸ்திரத்தன்மை குறித்த கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, “இண்டியா கூட்டணியில் வேற்றுமைகள் இருந்தாலும் நிறைய விஷயங்களில் கூட்டணிக் கட்சியினர் ஒத்துபோகின்றனர். இந்தியாவின் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஒட்டுமொத்த கூட்டணியும் ஒன்றுபட்டு நிற்கிறது. பெரும்பாலான கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிக்கிறது. அதானி, அம்பானி மட்டுமே இந்தியாவின் அனைத்து தொழில்களையும் நடத்தக்கூடாது. ஆகையால் கூட்டணியில் ஒற்றுமையில்லை என நீங்கள் கருதினால் அது துல்லியமானது இல்லை என்றே நான் சொல்வேன். மேலும் எந்தவொரு கூட்டணியாக இருந்தாலும் அதில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். இயல்பான கூட்டணி என்று எதுவும் இல்லை. அதில் தவறும் இல்லை. கூட்டணி ஆட்சிகளை நாங்கள் மீண்டும் மீண்டும் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறோம். அதனால் நாங்கள் மீண்டும் அதை வெற்றிகரமாக நடத்திக்காட்ட முடியும் என நம்புகிறோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x