Published : 01 Aug 2014 09:25 AM
Last Updated : 01 Aug 2014 09:25 AM
பேட்டரி மூலம் இயங்கும் இ ரிக் ஷாக்களுக்கு உடனடியாக தடை விதிக்கும்படி டெல்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இ-ரிக் ஷாக்கள் எனப் படும் பேட்டரி மூலம் இயங்கும் சிறு வாகனங்கள் அதிக அளவில் இயங்கி வருகின்றன. மெதுவாகச் செல்லும் இந்த வாகனங்கள் ‘ஷேர் ஆட்டோ’க்கள் போல் இயங்கி வருகின்றன.
இந்த வாகனங்களை தடை செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஷா நவாஸ் கான் என்பவர் வழக்கு தொடந்தார். அந்த மனுவில், “இந்த வாகனங்கள் 650 முதல் 800 வாட் மின் சக்தி மூலம் இயக்கப்படுகின்றன. மோட்டார் வாகன சட்டத்தின் படி, இவை பதிவு செய்யப்படுவதில்லை. எத்தனை பேரை ஏற்றிச் செல்ல வேண்டும் என்ற அளவீடு இல்லை. காப்பீடு செய்யப்படுவதில்லை. இந்த வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. அதற்கான இழப்பீடு பெற எந்த அடிப்படையும் இல்லாததால், இந்த வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.
இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.டி.அஹமது, பி.மிருதால் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. டெல்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுபேதா பேகம், “மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்திடமிருந்து டெல்லி அரசுக்கு வந்துள்ள கடிதத்தில், இ-ரிக் ஷாக்களுக்கு மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அனுமதி பெறத் தேவையில்லை என்ற வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப் போவதாகக் கூறப்பட்டுள்ளது. அப்படி செய்தால், அச்சட்டத்தின் கீழ் டெல்லி அரசு விதிமுறைகளை வகுக்கும்” என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள் கூறும்போது, “தற்போதைய நிலையில் இ-ரிக் ஷாக்கள் சட்டப்படி இயங்கவில்லை என்று ஒப்புக் கொள்கிறீர்கள். அப்படி என்றால் சட்ட விரோதமாக இயங்குவதை அனுமதிக்க முடியாது. உரிய விதிமுறைகள் வகுக்கும் வரை இ- ரிக் ஷாக்கள் இயங்க தடை விதிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
டெல்லியில் இ-ரிக் ஷாவில் பயணம் செய்யும் பள்ளிக் குழந்தைகள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT