Published : 10 Sep 2024 07:59 AM
Last Updated : 10 Sep 2024 07:59 AM

ஒடிசாவில் புயல் கரையை கடந்ததால் ஆந்திராவில் பலத்த காற்றுடன் கனமழை: நிலச்சரிவால் 3 பேர் உயிரிழப்பு

விசாகப்பட்டினம்: ஒடிசாவின் புரி அருகே புயல் கரையை கடந்தபோது, கடலோர ஆந்திராவின் விசாகப்பட்டினம், அல்லூரி சீதாராம ராஜு, விஜயநகரம், ஸ்ரீகாகுளம், பார்வதி மன்யம், அனகாபல்லி ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகம் வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால் மேற்கண்ட மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 நாட்களுக்கு கோனசீமா, காக்கிநாடா, என்.டி.ஆர்., கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களிலும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அல்லூரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 13 செ.மீ, விஜயநகரம் மாவட்டத்தில் 9 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

இந்நிலையில், தொடர் மழை காரணமாக சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் 24 மணி நேரமும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

பலத்த மழை காரணமாக அல்லூரி மாவட்டத்தில், சட்ராயபல்லி எனும் இடத்தில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேரை மீட்புபடையினர் மீட்டனர். நர்சிபட்டினம்- பத்ராசலம் தேசிய நெடுஞ்சாலையில் 12 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 16 கி.மீ.தூரம் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிச் சிறுவர்கள் நிதி: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்ற சீரமைப்பு பணிகளை முதல்வர் சந்திர பாபு நாயுடு நேற்று பார்வையிட்டார். அவர் கடந்த 9 நாட்களாக வீட்டுக்கு செல்லாமல் விஜயவாடா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பணியாற்றுகிறார்.

தினமும் பேருந்திலேயே வெறும் 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே தூங்கி, மக்களுக்காக பணியாற்றி வருகிறார். வெள்ள நிவாரண நிதிக்கு உதவ பலர் முன்வர வேண்டும் என சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரிடம் மேற்கு கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த  வித்யா நிகேதன் பள்ளி மாணவர்கள் வரிசையாக வந்து, தங்கள்சேமிப்பு பணம் ரூ.31 ஆயிரத்தை முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கினர். இதை ‘சிறிய வயது பெரிய மனது’ என சந்திரபாபு நாயுடு பாராட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x