Published : 10 Sep 2024 07:55 AM
Last Updated : 10 Sep 2024 07:55 AM
பெங்களூரு: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டு வைத்த தீவிரவாதிகள், முதலில் பாஜக அலுவலகத்தை குறிவைத்தனர் என்று தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி குண்டுவெடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 6 மாதத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தேசிய புலனாய்வு முகமை தரப்பு வழக்கறிஞர் பிரசன்ன குமார் நேற்று பெங்களூருவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். 1700 பக்க குற்றப்பத்திரிகையில் 429 சாட்சியங்களின் மூலம் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: இந்த சதி திட்டத்துக்கு கர்நாடக மாநிலம் ஷிமோகாவை அடுத்துள்ள தீர்த்தஹள்ளியைச் சேர்ந்த முசாஃபீர் உசேன், அப்துல் மதீன் தாஹா ஆகியோர் மூளையாக செயல்பட்டனர். அப்துல் மதீன் தாஹா வகுத்து கொடுத்த திட்டத்தின்படி முசாஃபீர் உசேன் குண்டுவைத்துள்ளார். இந்த இருவரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
இவர்களுடன் மாஸ் முனீர் அஹமது, முஸம்மில் ஷரீப், முகமது ஷஹீத் ஃபைசல், சோயிஃப் அகமது மிர்சா ஆகியோரும் இணைந்து இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் சோயிஃப் அகமது மிர்சா, முகமது ஷஹீத் ஃபைசல் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் கடந்த ஜனவரி 22-ம் தேதி அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட அன்று பெங்களூருவில் உள்ளபாஜகவின் மாநில அலுவலகத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் போலீஸாரின் பலத்த பாதுகாப்பு இருந்ததால் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் குண்டுவெடிப்பை நடத்தியுள்ளனர். இது ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT