Published : 09 Sep 2024 09:05 PM
Last Updated : 09 Sep 2024 09:05 PM

வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த நபருக்கு குரங்கு அம்மை உறுதி: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை (எம்பாக்ஸ்) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட அந்த நோயாளிக்கு மேற்கு ஆப்பிரிக்க கிளேட் 2-ன் குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘குரங்கு அம்மை நோய் தொடர்பாக முன்னர் சந்தேகிக்கப்பட்ட நபர், மேற்கொண்ட பயணத்தால் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க கிளேட் 2-ன் குரங்கு அம்மை நோய் இருப்பதை ஆய்வக சோதனை உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக, 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இந்தியாவில் பதிவான 30 பேருக்கான பாதிப்பைப் போன்று தற்போதைய ஒருவரும் தனிமைப்படுத்தப்படக் கூடிய நோயாளியாவார். இது தற்போதைய பொது சுகாதார அவசரநிலையின் ஒரு பகுதியாக உள்ள குரங்கு அம்மை நோயின் கிளேட் 1 தொடர்பானது இல்லை.

பாதிக்கப்பட்டுள்ள ஆண் நோயாளி, அண்மையில் குரங்கு அம்மை நோய் பரவி வரும் நாட்டுக்குப் பயணம் செய்துள்ளார். தற்போது அவர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மருத்துவ ரீதியாக அவர் நலமுடன் இருக்கிறார். எந்தவொரு இணை நோயாலும் அவர் பாதிக்கப்படவில்லை. சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதை உறுதி செய்யும் வகையில், தொடர்பை அறிதல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது இந்நோய் பெருமளவு பரவி ஆபத்தை விளைவிப்பதற்கான சூழல் ஏதுமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏற்பட்டது. தற்போது 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குரங்குகாய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் இதுவரை 220 பேர் இறந்துள்ளனர். இதையடுத்து குரங்கு காய்ச்சலை சர்வதேச சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது.

இந்நிலையில், குரங்கு காய்ச்சல் பாதிப்பு நாட்டிலிருந்து இந்தியா வந்த ஒருவருக்கு, குரங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், குரங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சிகிச்சை பெறும் அந்த நபர் நலமுடன் இருக்கிறார். இதனால் நோய் பரவல் அபாயம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, அந்த நபருக்கு மேற்கு ஆப்பிரிக்க கிளேட் 2-ன் குரங்கு அம்மை நோய் இருப்பதாகவும், பொது சுகாதார அவசரநிலையின் ஒரு பகுதியாக உள்ள குரங்கு அம்மை நோயின் கிளேட் 1 தொடர்பானது அது இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை குறித்து சுகாதார சேவைகள் தலைமை இயக்குநர் அதுல் கோயல் கூறுகையில், “குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சலுடன், உடலில் கொப்புளங்கள் ஏற்படும். இந்த பாதிப்பு 2 முதல் 4 வாரங்கள் வரை இருக்கம். இது காற்று மூலம் பரவாது. குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவருடன் பாதுகாப்பற்ற முறையில் உடல் ரீதியான தொடர்பு, நோயாளி பயன்படுத்திய பொருட்களை தொடுவது போன்றவற்றால் மட்டுமே இந்நோய் பரவும்.

நோய் பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவது சிறந்தது. குரங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு தனியான மருந்துகள் இல்லை. வைரஸ் தடுப்பு மருந்துகள் மூலமே சிகிச்சை அளிக்கப்படுகின்றன. ஆனால், குரங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி மருந்துகள் உள்ளன” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x