Published : 12 Jun 2018 03:44 PM
Last Updated : 12 Jun 2018 03:44 PM
குஜராத் மாநிலம், மேக்சனா மாவட்டத்தில் 88 வயது சாமியார் ஒருவர் தான் கடந்த 70 ஆண்டுகளாக எந்தவிதமான உணவும், தண்ணீரும் குடிக்காமல் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவரின் உடல்நிலையைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மிகப்பெரிய அதிசயம் என்று வியக்கின்றனர்.
மேக்சனா மாவட்டம், சாரோட் கிராமத்தில் வசிப்பவர் பிரகலாத் ஜனி (வயது 88).இவரை அப்பகுதி மக்கள் ‘மாதாஜி’ என்று மரியாதையுடன் அழைக்கிறார்கள். இவர் தான் கடந்த 70 ஆண்டுகளாக எந்தவிதமான உணவும் சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்து அதிசயிக்க வைத்து வருகிறார்.
உணவுக்குப் பதிலாக நாள் முழுவதும் தியானத்தில் இருந்து காற்றை மட்டுமே குடித்து தான் வாழ்ந்து வருவதாகவும் பிரகரலாத் தெரிவிக்கிறார். இதனால், உலக அளவில் இவரின் சீடர்கள் இவரை ‘சுவாச ஞானி’ என்று அழைக்கின்றனர்.
இவர் உயிர் வாழும் அதிசயம் குறித்து ஆய்வு செய்ய இதுவரை ஏராளமான மருத்துவர்கள், ஆய்வாளர்கள் வந்து ஆய்வு செய்துள்ளனர். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூட இந்தச் சாமியாரை ஆய்வு செய்துள்ளார்.
இவரை ஆய்வு செய்த மருத்துவர்கள், எந்த அடிப்படையில் இவர் உயிர்வாழ்ந்து வருகிறார், உடல் உறுப்புகள் எப்படி இயங்குகின்றன என்பது புரியாமல், குழும்பிவிட்டனர். ஆனால், ஏதோ மிகப்பெரிய அதிசயம் ஒன்றால் மட்டும் பிரகலாத் சாமியார் வாழ்வதை ஒப்புக்கொள்கின்றனர்.
கடந்த 2010-ம் ஆண்டு மத்திய பாதுகாப்புத் துறையின் மருத்துவம் மற்றும் அறிவியல் துறை, மத்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) ஆகியவற்றில் இருந்து சாமியார் பிரகலாத்தை ஆய்வு செய்தனர்.
அவரை 15 நாட்கள் கண்காணிப்பில் வைத்தனர். அவரைச் சுற்றி கேமராக்கள் பொருத்திக் கண்காணித்தனர். பிரகலாத் சாமியாருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன், அல்ட்ரா சவுண்ட், எக்ஸ்ரே, ரேடியாலஜி, பயோகெமிக்கல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
ஆனால், ஆய்வின் முடிவில், சாமியார் பிரகலாத், தனது உடலில் மிகவும் உச்சகட்டமாக பசியைத் தாங்கும் சக்தியும், தண்ணீர் தாகத்தை தாங்கும் சக்தியும், ஹார்மோன்களை கட்டுப்படுத்துதல், சக்தியை மிச்சப்படுத்துதல் போன்றவற்றை அபாரமாகச் செய்து வருகிறார் என்று அறிக்கை அளித்துவிட்டுச் சென்றனர்.
இதன் காரணமாக இந்தப் பகுதியில் சாமியார் பிரகலாத்தை மக்கள் வணங்கி ஆசி பெற்றுச் செல்கின்றனர். தங்களின் பிரச்சினைகளைக் கூறி அவரிடம் தீர்வு பெற்றுச் செல்கின்றனர்.
பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள், குஜராத் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சாமியார் பிரகலாத்தை சந்தித்து ஆசி பெற்றுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT