Published : 09 Sep 2024 05:46 AM
Last Updated : 09 Sep 2024 05:46 AM

பெண் மருத்துவர் கொலை விவகாரம்: மம்தா நடவடிக்கையில் அதிருப்தி - திரிணமூல் எம்.பி. ராஜினாமா கடிதம்

ஜவகர் சிர்கார்

புதுடெல்லி: கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்து வர் பாலியல் கொடுமைக்கு பின்னர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்காததால் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. ஜவகர் சிர்கார் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. ஜவகர் சிர்கார், கட்சித் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் நடந்த பாலியல் வன்கொடுமை, கொலை விவகாரத்தில் கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இளம்பெண் மருத்துவர் கொல்லப்பட்ட உடனேயே, முதல்வர் மம்தா பானர்ஜி தனது பழைய பாணியில் கடும் நடவடிக்கை எடுப்பார் என்று நம்பினேன். நீங்கள் நேரடியாக தலையிட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. மாநிலத்தை காப்பாற்ற ஏதாவது செய்யுங்கள்.

இந்தச் சூழலில், எனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன். அரசியலில் இருந்தும் விலகிக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார். முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஊழல் வழக்கில் பிடிபட்டபோது, ஊழலுக்கு எதிராக முதல்வர் மம்தா கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவகர் வெளிப்படையாக கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x