Published : 08 Sep 2024 03:17 PM
Last Updated : 08 Sep 2024 03:17 PM
ஸ்ரீநகர்: "ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்து வாக்காளர்களிடம் போலியான அச்சத்தை உருவாக்கி அவர்களை மிரட்ட பாஜக விரும்புகிறது. அதனால், அதனை மையப்படுத்தியே அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் பிரச்சாரங்கள் உள்ளன" என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தீவிரவாதம் தலைதூக்கும் என்று மக்களை தவறாக பாஜக வழி நடத்துவதாகவும் அவர் சாடினார். தேசிய மாநாட்டுக் கட்சி நிறுவனர் ஷேக் முகம்மது அப்துல்லாவின் 42-வது நினைவு நாளை முன்னிட்டு, நசீம்பாக்கில் உள்ள நினைவிடத்தில் ஃபரூக் அப்துல்லா அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, "அவர்கள் (பாஜக) இந்துச் சமூகத்தினரை அச்சுறுத்த விரும்புகின்றனர். இந்துகள் அவர்களுக்கு வாக்களிப்பார்கள் என்று பாஜகவினர் நினைக்கின்றனர். ஆனால் இன்று இந்துக்கள் மாறிவிட்டார்கள். முதலில் பாஜகவினர் ராமரின் பெயரைக் கூறி இந்துக்களிடம் வாக்கு கேட்டனர். இப்போதோ அவர்களை அச்சுறுத்த விரும்புகின்றனர். அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ பாஜக ரத்து செய்துவிட்டது. ஆனால், தீவிரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதா? தீவிரவாதம் மீண்டும் தலைதூக்கிவிட்டது. இவை அனைத்துக்கும் அவர்கள் தான் பொறுப்பு" என்றார்.
ஜம்மு காஷ்மீர் பயணத்தின் போது என்சிபி - காங்கிரஸ் கூட்டணி குறித்த அமித் ஷாவின் விமர்சனத்துக்கு பதில் அளித்த காஷ்மீரின் முன்னாள் முதல்வர், "அவர் தொடர்ந்து அவரது கட்சியைக் களங்கப்படுத்தவே முயல்கிறார். ஆனால், இறைவன் விரும்பினால் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். நமது முயற்சிகள் நமது மக்களின் முன்னேற்றமான வாழ்வுக்கு வழிவகுக்கும். உள்துறை அமைச்சர், அவர் விரும்புகிற எங்களைப் பற்றி நிறைய விஷங்களை பேசிக்கொண்டே இருக்கலாம்.
ஆனால் அவர்கள் உருவாக்க நினைக்கும் பாரதத்துக்கு நாங்கள் எதிரானவர்கள் என்பதை அவருக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். பாரதம், இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பவுத்தர்கள் என அனைவருக்கும் பொதுவானது. நாங்கள் ஊடுருவல் காரர்கள் இல்லை. நாங்கள் யாரின் மாங்கல்யத்தையும் பறிக்கவும் இல்லை.
இந்தியாவின் சுதந்திரத்துக்கு முஸ்லிம்களும் சரிசமமாக பங்களித்துள்ளனர். தேசிய மாநாடு மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஜம்மு காஷ்மீரின் மாநில அந்தஸ்தை திரும்பப் பெறுவதை உறுதி செய்யும். ஜம்மு காஷ்மீருக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் ஜூம்லா." என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...