Published : 07 Sep 2024 07:42 PM
Last Updated : 07 Sep 2024 07:42 PM

உ.பி.யில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி; பலர் சிக்கியிருப்பதாக அச்சம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியில் மூன்று தலங்கள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். 10 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

ஹர்மிலாப் பில்டிங் என்று அழைக்கப்படும் அந்தக் கட்டிடம் மருத்துவப் பொருள்களின் வணிகத்துக்கான குடோனாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த விபத்துச் சம்பவம் மாலை 5 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது. கட்டிடம் இடிந்து விழும்போது அதன் அடித்தளத்தில் பணிகள் நடந்து வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில், உள்ளூர் போலீஸார், தீயணைப்புத் துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எஃப்) மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் (எஸ்டிஆர்எஃப்) குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நிவாரண பணிகளுக்கான ஆணையர் ஜி.எஸ்.நவீன் குமார் கூறுகையில், “தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டு இடிபடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுமாறும், சம்பவ இடத்தில் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி உரிய சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட அதிகாரிகளுக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "லக்னோவின் டிரான்ஸ்போர்ட் நகரில் கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தை முதல்வர் யோகி ஆதித்தயநாத் கவனத்தில் எடுத்துள்ளார்.

மாவட்ட அதிகாரிகள், எஸ்டிஆர்எஃப் மற்றும் என்டிஆர்எஃப் குழுக்கள் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபடவும், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமாக வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x