Published : 07 Sep 2024 04:13 PM
Last Updated : 07 Sep 2024 04:13 PM
ஜம்மு: பிரதமர் மோடி தலைமையிலான அரசு சட்டப்பிரிவு 370 நீக்கிய பின்பு, தேசியக் கொடி மற்றும் அரசியலமைப்பின் கீழ் ஜம்மு காஷ்மீர் வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தலைச் சந்திக்க இருக்கிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின்னர் மாநில அந்தஸ்து மீட்டெடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், காங்கிரஸ் - தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி மீண்டும் பழைய முறையைக் கொண்டு வர முயல்வதாக அமித் ஷா சாடினார்.
இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை ஜம்மு காஷ்மீர் சென்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று அங்கு பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மேலும் சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம் வகுப்பதற்கான மூத்த தலைவர்களுடனான இரண்டு முக்கியமான ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
சனிக்கிழமை நடந்த பாஜக தொண்டர்களின் பேரணியில் கலந்து கொண்டு பேசிய அமித் ஷா கூறியதாவது: "தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தீவிரவாதம், தன்னாட்சி புத்துயிர் பெறுவதையும், பாஜக அரசால் இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட குஜ்ஜார்கள், பஹாரிகள், பேகர்வால்கள் மற்றும் தலித்துகள் என எந்த சமூகத்துக்கும் அநீதி இழைக்கப்படுவதை அனுமதிக்காது.
ஜம்மு காஷ்மீரில் நடக்க இருக்கிற சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்று சிறப்புமிக்கது. ஏனென்றால், முந்தைய நடைமுறையான இரண்டு தேசியக் கொடி இரண்டு அரசியலமைப்பு போல் இல்லாமல் சுதந்திரத்துக்கு பின்னர் தேசியக் கொடி மற்றும் அரசியலமைப்பின் கீழ் தேர்தல் நடைபெற இருக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நமக்கு ஒரே பிரதமர் தான் இருக்கிறார். அவர் நரேந்திர மோடி.
யூனியன் பிரதேசத்தில் மத்திய அரசு 70 சதவீதம் பயங்கரவாதத்தை அழித்துவிட்ட நிலையில், தேசிய மாநாட்டு கட்சி - காங்கிரஸ் கூட்டணி ஜம்மு காஷ்மீரை மீண்டும் தீவிரவாத நெருப்புக்குள் தள்ள முயற்சி செய்கிறது. அவர்களால் ஜம்மு காஷ்மீரில் ஒரு போதும் ஆட்சி அமைக்கவே முடியாது. அதே நம்பிக்கையுடன் இருங்கள். யூனியன் பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைக்க நமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்யுங்கள்.” இவ்வாறு அமித் ஷா பேசினார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவைகளுக்கு செப்.18, 25 மற்றும் அக்.1 என மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT