Published : 07 Sep 2024 01:02 PM
Last Updated : 07 Sep 2024 01:02 PM

‘கடவுள் உங்களை தண்டித்தார்’ - வினேஷ் போகத் ஒலிம்பிக் தோல்வியை விமர்சித்த பிரிஜ் பூஷண்

பிரிஜ் பூஷண் சிங் | கோப்புப்படம்

புதுடெல்லி: “ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விளையாட்டில் கலந்து கொள்வதற்காக ஏமாற்றினார்; கடவுள் அவரை தண்டித்ததால், அவரால் போட்டியில் பதக்கம் வெல்ல முடியவில்லை” என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் விமர்சித்துள்ளார்.

பாஜக முன்னாள் எம்.பி.யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் ஊடகப் பேட்டி ஒன்றில், “ஒரு விளையாட்டு வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப் பிரிவுகளில் சோதனைகளை மேற்கொள்ள முடியுமா? என்று நான் வினேஷ் போகத்திடம் கேட்க விரும்புகிறேன். எடை கூடிய பிறகு ஐந்து மணிநேரம் சோதனையை நிறுத்தி வைக்க முடியுமா? நீங்கள் மல்யுத்தத்தில் வெற்றி பெறவில்லை. ஏமாற்றியே அங்கு நீங்கள் சென்றீர்கள். இன்னொரு வீராங்கனைக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறித்துச் சென்றீர்கள். அதற்காக கடவுள் உங்களை தண்டித்துள்ளார்.

விளையாட்டுத் துறையில் ஹரியாணா இந்தியாவின் கிரீடம் போன்றது. அவர்கள் சுமார் 2.5 ஆண்டுகள் மல்யுத்த விளையாட்டை நிறுத்தி வைத்தார்கள். ஆசிய விளையாட்டில் சோதனைகள் இல்லாமல் பஜ்ரங் புனியா கலந்து கொண்டது உண்மையா இல்லையா?” என்று குற்றம்சாட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், “பெண்களை அவமதிக்கும் குற்றத்தை நான் செய்யவில்லை. பெண்களை அவமதிக்கும் குற்றத்தை யாராவது செய்திருந்தால் அது பஜ்ரங்கும், வினேஷும் தான். மேலும் அதற்கு திரைக்கதை எழுதிய பூபேந்திர ஹூடாவும் பொறுப்பேற்க வேண்டும். கட்சி கேட்டுக்கொண்டால் ஹரியாணா தேர்தலில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்வேன். ஹரியாணாவில் எந்த ஒரு பாஜக வேட்பாளரும் வினேஷ் போகத்தை எளிதில் தோற்கடிப்பார்” என்றார்.

முன்னதாக மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். தொடர்ந்து ஹரியாணாவின் ஜூலானா தொகுதியில் கட்சியின் வேட்பாளராக வினேஷ் போகத்தை கட்சி அறிவித்தது. பஜ்ரங் அகில இந்திய கிஷான் காங்கிரஸின் செயல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பின்னணியில் பிரிஜ் பூஷணின் இந்தக் கருத்து வந்துள்ளது.

பிரிஜ் பூஷண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் அத்துமீறல் புகார் தெரிவித்து, அவருக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா இருவரும் முன்னிலை வகித்தனர்.

கட்சியில் இணைந்த பின்பு பேசிய வினேஷ் போகத், " டெல்லியில் போராட்டம் நடத்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டபோது காங்கிரஸ் அவர்களை ஆதரித்தது. பாஜக பிரிஜ் பூஷணை பாதுகாத்தது" என்றார்.

இதனிடையே, மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம், பாஜகவுக்கு எதிரான காங்கிரஸின் சதி என்று பாஜக தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x