Published : 07 Sep 2024 04:17 AM
Last Updated : 07 Sep 2024 04:17 AM
புதுடெல்லி/ சிங்கப்பூர்: இந்தியாவில் அதிக வளர்ச்சிக்கு வாய்ப்புள்ள விமானப் போக்குவரத்து, உள்கட்டமைப்பு போன்ற துறையில் முதலீடு செய்ய முன் வரவேண்டும் என சிங்கப்பூர் பெரும் தொழிலதிபர்களுக்கு பிரதமர்நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
சிங்கப்பூரில் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயலதிகாரிகளை சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார். சிங்கப்பூர் சவரி்ன் வெல்த் பண்ட் டெமாசெக் ஹோல்டிங்ஸ் அண்ட் ஜிஐசி, டிபிஎஸ் குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ரெனிவபிள்ஸ் பிளேயர் செம்ப்கார்ப், சங்கி ஏர்போர்ட், சிங்டெல், எஸ்ஜிசி, கேப்பிட்டல் லேண்ட் இன்வெஸ்ட்மென்ட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: எனது மூன்றாவது பதவிக்காலத்தில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அதன் வளர்ச்சியும்,வேகமும் மேலும் அதிகரிக்கும். இதனால், ரயில்வே, சாலைகள், துறைமுகங்கள், விமானப் போக்குவரத்து, தொழில் பூங்காக்கள், டிஜிட்டல் இணைப்பு ஆகியவற்றில் முதலீட்டுக்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனை சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் திறமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
10 ஆண்டுகளில் வளர்ச்சி: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா வியக்கத்தக்க அளவில் முன்னேற்றங்களை அடைந்துள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை, கொள்கை முன்கணிப்பு, வணிகம் செய்வதை எளிமையாக்குவதற்கான சீர்திருத்தங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திறமையான பணியாளர் குழு, விரிவான சந்தை வாய்ப்பு, உலக பொருளாதார வளர்ச்சிக்கு 17 சதவீத பங்களிப்பை வழங்கும் இந்தியாவில் முதலீடு செய்வது என்பது எதிர்கால முன்னேற்றத்துக்கான அடிப்படை. விமான சந்தையில் பரந்து விரிந்த வானத்தைப் போல் ஏராளமான முதலீட்டு வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. சாதாரண ஸ்கிராப்பிங் தொழில் கூட பெரிய முதலீட்டுக்கான வாய்ப்புகளை அளிக்கிறது. குறிப்பாக, பழைய அரசு வாகனங்கள் அனைத்தையும் அழிக்க திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் உள்ள தொழிலதிபர்களுக்கு முதலீட்டு நடவடிக்கைகளை இலகுவாக்க ஏதுவாக இன்வெஸ்ட் இந்தியா அலுவலகம் இங்கு திறக்கப்படு்ம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ரூ.5 லட்சம் கோடி முதலீடு: சிங்கப்பூரின் முதலீட்டு நிதியம், உள்கட்டமைப்பு, தயாரிப்பு, எரிசக்தி, லாஜிஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சிஇஓக்கள் பிரதமர் மோடியுடன் நேற்றுமுன்தினம் நடைபெற்ற வட்டமேசை விவாதத்தில் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவில் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.5 லட்சம் கோடியை (60பில்லியன் அமெரிக்க டாலர்) முதலீடு செய்வதாக பிரதமர் மோடியிடம் அவர்கள் உறுதியளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT