Published : 06 Sep 2024 06:09 PM
Last Updated : 06 Sep 2024 06:09 PM

புதிய சுற்றுலா மையம், 5 லட்சம் வேலைகள்: ஜம்மு காஷ்மீருக்கான பாஜக தேர்தல் அறிக்கை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே புதிய சுற்றுலா மையம் உருவாக்கப்படும். 5 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதிகளை பட்டியலிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்காக பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். அந்தத் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • ஜம்முவிலும் சுற்றுலா மையங்கள் உருவாக்கப்படும்.
  • 5 லட்சம் வேலைகள் உருவாக்கப்படும்.
  • ரஜோரி அருகே புதிய சுற்றுலா மையம் உருவாக்கப்படும்.
  • காஷ்மீர் பண்டிட்கள் உட்பட இடம்பெயர்ந்த சமூகங்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்.
  • பண்டிட் சமூகம் பாதுகாப்பாக காஷ்மீர் திரும்பவும், மீண்டும் குடியமர்த்தவும் திகா லால் விஸ்தபித் சமாஜ் புரனவாஸ் யோஜனா (TLTVPY) தொடங்கப்படும்.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கடந்த 10 ஆண்டுகளில் இந்த யூனியன் பிரதேசம் அதிகபட்ச தீவிரவாதம் என்பதில் இருந்து மாறி, சுற்றுலாவுக்கான சிறப்பிடமாக உருவெடுத்துள்ளது. பாஜக காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத சூழலைத் தகர்த்துள்ளது.

கடந்த 1947-ம் ஆண்டிலிருந்து ஜம்மு காஷ்மீர் நமக்கு நெருக்கமான பகுதியாக இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்ததது, இருக்கிறது, எப்போதும் இருக்கும். காஷ்மீரில் அமைதியை மீட்டெடுப்பதில் பாஜக கவனம் செலுத்துகிறது. பிற கட்சிகள் சமரச அரசியலைச் செய்தன. பிரிவினைவாதத்துக்கு அவையே பொறுப்பு" என்று தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு செப்.18-ம் தேதியும், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு செப்.25-ம் தேதியும், மூன்றாவது கட்ட வாக்குப்பதிவு அக்.1-ம் தேதியும் நடக்க இருக்கிறது. வாக்குப்பதிவுகள் அக்.8-ம் தேதி எண்ணப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x