Published : 06 Sep 2024 02:59 PM
Last Updated : 06 Sep 2024 02:59 PM
புதுடெல்லி: மல்யுத்த வீரர்களான வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துவிட்டு முறைப்படி அக்கட்சியில் இணைந்தனர்.
ஹரியாணா தேர்தலுக்கு முன்பாக மல்யுத்த வீரர்கள் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என்ற ஊகங்கள் நிலவி வந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) டெல்லியில் காங்கிரஸ் தேசியத் தலைவர் கார்கேவை சந்தித்துவிட்டு முறைப்படி கட்சியில் இணைந்துள்ளனர்.
இவர்கள் இருவருமா அல்லது யாரவது ஒருவர் தேர்தலில் போட்டியிடுவார்களா என்பது விரைவில் தெரியவரும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக வீரர்கள் இருவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை கடந்த புதன்கிழமை (செப்.4) டெல்லியில் சந்தித்தனர். இதுதொடர்பான புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வினேஷ்போகத் தான் செய்துவந்த இந்திய ரயில்வே பணியை ராஜினாமா செய்துள்ளார். இந்திய ரயில்வேயில் பணியாற்றியது “என் வாழ்க்கையின் பெருமையான, மறக்கமுடியாத தருணமாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒலிம்பிக் சாதானை.. பஜ்ரங் புனியா டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இதனிடையே வினேஷ் போகத் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பாரிஸ் ஒலிம்பிக்கில் எட்டிப்பிடித்தார். அந்தநிலையில் அவர் போட்டியிட்ட 50 கிலோ எடை பிரிவில் நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட 100 கிராம் அதிகமாக இருந்ததாக கூறி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாகவும் அவர் அறிவித்தார்.
பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் இருவரும், பாஜக முன்னாள் எம்.பி.யும், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷண் சிங்குக்கு எதிராக கடந்த ஆண்டு நடந்த பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு போராட்டத்தில் அங்கம் வகித்தனர்.
இந்தப் பின்னயில் வீரர்கள் இருவரும் ஹரியாணா தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியில் இணையப் போவதாக ஊகங்கள் நிலவி வந்தன. அதற்கு ஏதுவாக வினேஷ் போகத் அண்மையில் ஷம்பு எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவினைத் தெரிவித்து இருந்தார்.
ரயில்வே பணி ராஜினாமா: காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு முன்பாக வினேஷ் போகத் இந்திய ரயில்வேயில் தான் பார்த்து வந்த பணியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து பதிவொன்றை வினேஷ் போகத் வெளியிட்டுள்ளார். அதில் அவர், “எனது வாழ்க்கையின் இந்தக் காலகட்டத்தில் இந்திய ரயில்வே பணியில் இருந்து என்னை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்துள்ளேன். அதற்கான எனது ராஜினாமா கடிதத்தை சம்மந்தப்பட்ட இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளேன். இந்திய ரயில்வேக்கும், நாட்டுக்கும் சேவை செய்ய இந்த வாய்ப்பினை வழங்கிய இந்திய ரயில்வே குடும்பத்துக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ஹரியாணாவில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் அக்.5-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவும், அக்.8-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT