Published : 06 Sep 2024 04:22 AM
Last Updated : 06 Sep 2024 04:22 AM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது முதல்முறையாக சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் திறக்கும் திட்டத்தை இந்தியா அறிவித்தது. இருநாடுகள் இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
புருனே பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி 2 நாள்பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் லாரன்ஸ் வோங்கை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், சிங்கப்பூர் வெளியுறவு துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். அவர்கள் முன்னிலையில் 4 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
முதல் ஒப்பந்தம் சிங்கப்பூரின் டிஜிட்டல் மேம்பாடு, தகவல் அமைச்சகம் - இந்தியாவின் மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இடையே மேற்கொள்ளப்பட்டது. இது, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, இணைய பாதுகாப்பு, 5ஜி, சூப்பர் கம்ப்யூட்டிங், குவான்டம் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவற்றில் பணியாளர்களின் திறனை மேம்படுத்த உதவும். செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தியில் இணைந்து செயல்படும் வகையில் 2-வது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சுகாதாரம், மருத்துவ துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க 3-வதுஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளில் இருநாடுகள் இடையிலான கூட்டு முயற்சியை ஊக்குவிக்கும்.
4-வது ஒப்பந்தம், இந்தியாவின் திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் அமைச்சகம் மற்றும் சிங்கப்பூர் கல்வி அமைச்சகம் இடையே கையெழுத்தானது. குறிப்பாக, தொழில்நுட்பம் மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை வளர்ப்பதை இந்த ஒப்பந்தம் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. திறன் மேம்பாட்டு துறையில் இரு நாடுகள் இணைந்து செயல்படுவதை இது ஊக்குவிக்கும். மேலும், இந்தியா - சிங்கப்பூர் இடையிலான பன்னெடுங்கால கலாச்சார பிணைப்பை பிரதிபலிக்கும் வகையில் சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையத்தை திறப்பதற்கான திட் டத்தையும் இந்தியா இந்த சந்திப்பின்போது அறிவித்தது.
இதுகுறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: இந்திய பொருளாதாரத்தில் 160 பில்லியன் அமெரிக்க டாலர்முதலீட்டை சிங்கப்பூர் கொண்டுள்ளது. மேலும், இந்தியாவின் முக்கிய பொருளாதார கூட்டாளியாக சிங்கப்பூர் விளங்குகிறது. இந்தியாவின் நிலையான மற்றும் விரைவான பொருளாதார வளர்ச்சி சிங்கப்பூர் நிறுவனங்களுக்கு பரந்த அளவிலான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதை பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு, கடல்சார் களவிழிப்புணர்வு, கல்வி, ஏஐ, ஃபின்டெக், அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போதைய ஒத்துழைப்பின் நிலையை இருநாடுகளின் தலைவர்கள் மதிப்பீடு செய்தனர். பொருளாதாரம், மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கு இருநாட்டு தலைவர்களும் கூட்டாக அழைப்பு விடுத்தனர். பசுமை வழித்தடத் திட்டங்களை விரைவுபடுத்தவும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். இவ்வாறு வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘இந்தியாவுக்குள் பல சிங்கப்பூர்கள்’ - மோடி விருப்பம்: இந்தியா தனக்கென பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் உடனான சந்திப்பின்போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் மோடி கூறியபோது, ‘‘வளரும் நாடுகள் அனைத்துக்கும் சிங்கப்பூர் ஒரு உத்வேகமாக விளங்குகிறது. இந்தியாவுக்குள் பல சிங்கப்பூர்களை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். இந்த இலக்கை நோக்கிய பயணத்துக்கான ஒத்துழைப்பை வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT