Published : 05 Sep 2024 02:40 PM
Last Updated : 05 Sep 2024 02:40 PM
லக்னோ: யோகி ஆதித்யநாத் அரசு புல்டோசர் அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு, ஓநாய்கள் மனித குடியிருப்புகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கு ஒரு உத்தியை உருவாக்க வேண்டும் என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: உத்தரப் பிரதேசத்தின் சில மாவட்டங்களில் வனவிலங்குகள் குழந்தைகள், மூத்தவர்கள் மற்றும் இளைஞர்களைத் தாக்கியுள்ளது. இதனைத் தடுப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஏனென்றால், தொழிலாளர்கள், எளிய மக்கள் தங்களின் கால்நடைகளுக்கு தீவனம் சேகரிக்க முடியாமல் தவிக்கின்றனர். இவ்வாறு ஊருக்குள் வரும் வன விலங்குகளைத் தடுப்பதற்காக அரசு ஒரு உத்தியை உருவாக்க வேண்டும்.
அதேபோல் மாநிலத்தின் பாஸ்தி மாவட்டத்தில், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் நோயாளியை அழைத்துச்செல்லும் வழியில், நோயாளியின் மனைவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்த முயற்சி செய்தது ஒரு அவமானகரமான விஷயம். அந்த பெண்ணின் கணவர் உயிரிழந்து விட்டார். அந்த ஓட்டுநர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “உத்தரப் பிரதேச அரசும், சமாஜ்வாதி கட்சியும் புல்டோசர் அரசியலை உச்ச நீதிமன்றத்திடம் விட்டுவிட வேண்டும். அங்கு இதற்கு ஒரு முழுமையான நீதி கிடைக்கும்" என்று மாயாவதி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அமர்வு திங்கள்கிழமை வழக்கு விசாரணையின்போது, “ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவர் என்பதற்காக அவருடைய வீட்டை எப்படி இடிக்க முடியும்? அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டாலும் சட்டத்தின் நடைமுறையைப் பின்பற்றாமல் அதனைச் செய்ய முடியாது” என்று தெரிவித்திருந்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இந்த பார்வை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்-க்கு இடையேயும் பெரும் வார்த்தை பரிமாற்றங்களுக்கு வழிவகுத்தது.
யோகி ஆதித்யநாத் தனது அரசின் புல்டோசர் நடவடிக்கை என்பது துணிச்சலான நடவடிக்கை என்று தெரிவித்திருந்தார். இதனிடையே அகிலேஷ் யாதவ் தனது நடவடிக்கையில் முதல்வருக்கு அதிக நம்பிக்கை இருந்தால் தேர்தலில் அவர் புல்டோசர் சின்னத்தில் போட்டியிடட்டும் என்று சவால் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT