Published : 05 Sep 2024 04:05 AM
Last Updated : 05 Sep 2024 04:05 AM
புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், பாலியல் குற்றங்கள் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கவகை செய்யும் ‘‘அபராஜிதா மசோதா’’ மேற்கு வங்க சட்டப்பேரவையில் நேற்றுமுன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும், இதுபோன்ற குற்ற வழக்குகளை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கும்படியும் கடந்த 2021-ம் ஆண்டே மேற்கு வங்க அரசுக்கு கடிதம் அனுப்பினேன்.
ஆனால், விரைவு சிறப்புநீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. ஆனால், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியதாக முதல்வர் மம்தா கூறுகிறார். பெண்கள், குழந்தைகளை பாதுகாப்பது புனிதமான கடமை. அதிலிருந்து முதல்வர் மம்தா தவறிவிட்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை மம்தா பானர்ஜி அலட்சியப்படுத்தி வருகிறார். இது மிகவும் வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைந்து நீதி கிடைக்க செய்யாமல் அலட்சியமாக இருக்கிறார்.
கடும் தண்டனை: அதற்கு கடந்த 2021-ம் ஆண்டு நான் அனுப்பிய கடிதமே சாட்சி. அத்துடன் பாலியல் குற்றங்களில் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி விரைந்து செயல்பட வேண்டியது மாநிலங்களின் கடமையாகும். மேற்கு வங்கத்துக்கு 123 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் மற்றும் 20 போக்சோ நீதிமன்றங் கள் அமைக்க ஒதுக்கீடு வழங்கப் பட்டது. ஆனால், இதுவரை மேற்கு வங்க அரசிடம் இருந்து ஒப்புதல் வரவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு மே மாத நிலவரப்படி மேற்குவங்க மாநிலத்தில் 28,559 பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமானால், விரைவு நீதிமன்றங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்களை அமைக்க மாநில அரசு முன்வந்தால் உடனடியாக அதற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கும். இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...