Published : 03 Sep 2024 03:03 PM
Last Updated : 03 Sep 2024 03:03 PM

7 புதிய திட்டங்களுக்காக வேளாண் துறைக்கு ரூ.14,000 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, வேளாண் துறையை ஊக்குவிக்கும் 7 திட்டங்களுக்காக ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு பிறகு, செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் வருமானத்தை அதிகரிக்க டிஜிட்டல் வேளாண்மை, உணவு பாதுகாப்பு, கல்வி மற்றும் நீடித்த விவசாயம் உட்பட 7 முக்கிய திட்டங்களுக்கு மொத்தம் ரூ.13,966 கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வேளாண்மைக்கு ரூ.2,817 கோடி: இதில் டிஜிட்டல் வேளாண்மை திட்டம் மிக முக்கியமான திட்டம் ஆகும். இதற்காக ரூ.2,817 கோடி ஒதுக்கப்படும். தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் செயல்திறன் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்தி வேளாண்மை துறையை நவீனமயமாக்க இந்த திட்டம் உதவும். உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான பயிர் அறிவியல் திட்டத்துக்கு ரூ.3,979 கோடி ஒதுக்கப்படும்.

பயிர் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை அதிகரிப்பது, பொதுமக்களுக்கு சிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வது ஆகியவைதான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும். வேளாண்மை கல்வி, மேலாண்மை மற்றும் சமூக அறிவியலை பலப்படுத்த ரூ.2,291 கோடி ஒதுக்கப்படும். நாடு முழுவதும் வேளாண்மை கல்வி மற்றும் மேலாண்மை திட்டங்களின் வளர்ச்சிக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்த திட்டத்தை வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் செயல்படுத்தும்.

நிலையான கால்நடை சுகாதாரம் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்த ரூ.1,702 கோடி ஒதுக்கப்படும். கால்நடை மற்றும் பால் உற்பத்தி மூலம் விவசாயிகளின் வருவாயை பெருக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம். நிலையான தோட்டக்கலை வளர்ச்சிக்காக ரூ.860 கோடி ஒதுக்கப்படும். தோட்டக்கலை பயிர்களின் தரம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.

இதன்மூலம் வேளாண் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் இத்துறை முக்கிய பங்கு வகிக்க முடியும். மேலும், வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டுபோய் சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கிரிஷி விஞ்ஞான் கேந்திரங்களை பலப்படுத்த ரூ.1,202 கோடி ஒதுக்கப்படும்.இயற்கை வள மேலாண்மைக்கும் வேளாண்மை நடவடிக்கைகளுக்கு இயற்கை வளங்களை நிலையாக பயன்படுத்துவதை வலியுறுத்தவும் ரூ.1,115 கோடி ஒதுக்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x