Published : 02 Sep 2024 01:49 PM
Last Updated : 02 Sep 2024 01:49 PM

நெகிழ்வு எரிபொருள் வாகனங்களுக்கான வரியை மாநில அரசுகள் குறைக்க வேண்டும்: நிதின் கட்கரி வலியுறுத்தல்

நிதின் கட்கரி | கோப்புப் படம்

புதுடெல்லி: நெகிழ்வு எரிபொருள் வாகனங்கள் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற இயற்கை எரிவாயு தொழில்நுட்ப கண்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நிதின் கட்கரி, "வளர்ச்சி அடைந்த இந்தியா எனும் கனவை நனவாக்க பல்வேறு முன்முயற்சிகள் தேவைப்படுகின்றன. நாம் தற்போது ஆண்டுக்கு ரூ. 22 லட்சம் கோடி மதிப்புள்ள கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறோம். இது உண்மையில் காற்று மாசுபாடு தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல, இது ஒரு பொருளாதார பிரச்சினையும் கூட. கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க நாம் உயிரி எரிபொருளை ஊக்குவிக்க வேண்டும்.

எத்தானால் ஒரு உயிரி எரிபொருள். எனவே, பெட்ரோல் அல்லது டீசல், எத்தனால், மின்சாரம் ஆகிய மூன்றிலும் இயங்கக்கூடிய நெகிழ்வு எரிபொருள் வாகனங்களுக்கான வரியை மாநில அரசுகள் குறைக்க முன்வர வேண்டும். நெகிழ்வு எரிபொருள் இன்ஜின்களைக் கொண்ட வாகனங்களைத் தயாரிக்கும் பணியை தொடங்க டாடா, சுசுகி, டொயோடா நிறுவனங்கள் முடிவு செய்துவிட்டன. பஜாஜ், டிவிஎஸ் ஆகிய நிறுவனங்களும் 100% எத்தனால் மூலம் இயங்கும் வாகன மாடல்களை தயாரித்துள்ளன.

இத்தகைய நெகிழ்வு எரிபொருள் இன்ஜின்களைக் கொண்ட வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12% ஆக உள்ளது. இதனை குறைக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும். உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் நான் பேசும்போது இந்த கோரிக்கையை நான் முன்வைத்தேன். அதனை அவர் ஏற்றுக்கொண்டார். அதனை உதாரணமாக எடுத்துக்கொண்டு மற்ற மாநிலங்களும் நெகிழ்வு எரிபொருள் வாகனங்களுக்கான வரியை குறைக்க வேண்டும்.

எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்துவதன் மூலம் நாம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியும். எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயத்துறை அதிக பலன்பெற முடியும். தற்போது நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்களிப்பு 12%. உற்பத்திப் பிரிவு 22-24%. சேவைப் பிரிவு 52-54%.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12% பங்களிப்பு செய்யும் விவசாயத்துறை, 65 சதவீதத்துக்கும் அதிக மனித வளத்தைக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி வலியுறுத்தும் தற்சார்பு இந்தியாவை கட்டமைக்க 5 டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாக நமது பொருளாதாரம் உருவெடுக்க வேண்டும்.

அப்போதுதான் நாம் 3வது பெரிய பொருளாதாரமாக மாறுவது என்ற நம் அனைவருக்குமான இலக்கை நம்மால் அடைய முடியும். இதற்கு நாம் நமது இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும். நமது இறக்குமதி செலவை குறைப்பதில் இயற்கை எரிபொருள் துறை மிக முக்கிய பங்கு வகிக்க முடியும். அதோடு, கிராமப்புற, பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x