Published : 02 Sep 2024 12:56 PM
Last Updated : 02 Sep 2024 12:56 PM

உ.பி.யில் தொடரும் ஓநாய்கள் தாக்குதல்: 2 வயது குழந்தை உயிரிழப்பு, மூவர் காயம்

‘ஆபரேஷன் பேடியா’ மூலம் பிடிக்கப்பட்ட ஓநாய்

பஹ்ரைச்: உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய்களின் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஓநாய்களின் அண்மைய தாக்குதலில் இரண்டு வயது குழந்தை உயிரிழந்து, மூவர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் இன்று (செப்.2) அதிகாலை நடந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

“என்னுடைய ஆறு மாத குழந்தையின் அழுகுரலை கேட்டு நான் எழுந்தேன். அப்போதுதான் எனது இரண்டு வயது மகளை ஓநாய்கள் இழுத்துச் சென்றதை நான் அறிந்தேன். நாங்கள் கூலித் தொழிலாளிகள். எங்கள் வீட்டில் கதவு கூட இல்லை. அதனால் தான் இந்தச் சம்பவம் நடந்தது. எனது மகளின் இரண்டு கைகளையும் ஓநாய் கடித்திருந்தது” என உயிரிழந்த சிறுமியின் தாயார் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த பகுதியில் இதற்கு முன்பு பலமுறை ஓநாய்களின் நடமாட்டத்தை அங்குள்ள மக்கள் பார்த்துள்ளனர். இது தொடர்பாக வனத்துறையில் தெரிவித்த போது வீடியோ ஆதாரம் கேட்டுள்ளனர். தங்களது மொபைல் போனை எடுப்பதற்குள் ஓநாய்கள் மாயமாகி விடுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். வனத்துறையின் அலட்சியம் காரணமாக ஒரு பிஞ்சுச் குழைந்தையின் உயிர் தங்கள் பகுதியில் பறிபோயுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை வசம் எதுவும் இல்லை, ஓநாய் குறித்து புகார் கொடுத்தால் கூட மிகவும் தாமதமாகவே அவர்கள் வருகின்றனர் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

மக்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு கொடுத்துள்ளோம். எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் இரவு நேரத்தில் வீட்டுக்குள் தூங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாக மாவட்ட மாஜிஸ்திரேட் மோனிகா ராணி தெரிவித்துள்ளார். இதுவரை 4 ஓநாய்களை பிடித்துள்ளதாகவும். மேலும், 2 ஓநாய்களை விரைந்து பிடிக்க முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பஹ்ரைச் மாவட்டத்தில் மட்டும் கடந்த 45 நாட்களில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் என ஒன்பது பேர் ஓநாய் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள 35 கிராமங்களுக்கு முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

“இந்த விவகாரத்தில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். காவல் துறை, வனத்துறை, வருவாய் துறை, உள்ளாட்சி நிர்வாகிகள் என அனைத்து துறையும் இதில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்” என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மக்களை அச்சுறுத்தி வரும் ஓநாய்களை பிடிப்பதற்காக வனத்துறை ‘ஆபரேஷன் பேடியா’ என்ற ஒன்றை முயற்சியை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x