Published : 02 Sep 2024 12:10 PM
Last Updated : 02 Sep 2024 12:10 PM

கணவரை தொடர்ந்து தலைமைச் செயலரான மனைவி: கேரள சுவாரஸ்யம்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியான சாரதா முரளிதரன், தனது கணவர் வேணுவைத் தொடர்ந்து தலைமைச் செயலராகப் பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் கேரள தலைமைச் செயலராக இருந்த வேணுவின் பணி காலம் நிறைவடைந்தது. அவர் ஓய்வு பெற்றதை அடுத்து அந்தப் பொறுப்பை அவரது மனைவி சாரதா முரளிதரன் ஏற்றுக் கொண்டார். கடந்த மாதம் இது குறித்த தகவலை கேரள அரசு வெளியிட்டது. இதற்கு முன்பு திட்டம் மற்றும் பொருளாதார விவகாரங்கள் கூடுதல் தலைமைச் செயலராக அவர் பணியாற்றியுள்ளார். அவர்கள் இருவரும் 1990-ம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச் அதிகாரிகள்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி சசி தரூர், எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். “இந்தியாவில் முதல் முறையாக (அனைவரும் அறிந்த வரை) கேரள மாநில தலைமைச் செயலர் வேணு, ஓய்வு பெறுவதை அடுத்து தனது பொறுப்பை மனைவியிடம் ஒப்படைத்தார். கேரள மாநில தலைமை செயலகத்தில் இது முறைப்படி நடந்தது. சீனியாரிட்டி அடிப்படையில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். மேலும், அதன் வீடியோவையும் இதில் சேர்த்துள்ளார். கணவன் - மனைவி அடுத்தடுத்து கேரள தலைமைச் செயலர் பொறுப்பினை கவனிப்பதை அம்மாநில முதல்வர் பினராயி விஜயனும் குறிப்பிட்டுள்ளார்.

“அவர் ஓய்வு பெற்றுள்ள நிலையில் நான் இன்னும் 8 மாத காலம் பணியாற்ற வேண்டி உள்ளது. நாங்கள் இருவரும் சிவில் பணியில் 34 ஆண்டுகள் இணைந்தே பணியாற்றினோம்” என சாரதா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x